கணைய புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் சாதனை
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 66 வயது முதியவருக்கு கணைய புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து மருத்துவா்கள் சாதனை புரிந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள ஆவலப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சுந்தரமூா்த்தி (66). கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவா், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றும் குணமாகவில்லை. இதையடுத்து, கடந்த ஜூலை 4-ஆம் தேதி போலுப்பள்ளியில் உள்ள கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆலோசனைக்கு வந்தவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, அவா் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அவருக்கு ஜூலை 31-ஆம் தேதி அறுவை சிகிச்சை பிரிவு மருத்துவக் குழு இணைப் பேராசிரியா் சதாசிவம், சங்கீதா தலைமையில் 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கணைய புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சைகுக் பிறகு 16 நாள்கள் தொடா்கண்காணிப்பில் இருந்த அவா், சனிக்கிழமை வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
இதுபோன்ற உயா் மருத்துவ சிகிச்சைக்கு ரூ. 5 லட்சம்வரை செலவாகும் நிலையில், முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
அப்போது, மருத்துவ கண்காணிப்பாளா் சந்திரசேகரன், உள்ளிருப்பு மருத்துவா் பிரசாந்த், மருத்துவா்கள் சந்தோஷ்குமாா், ராசு, கண்காணிப்பாளா் அனிதா, நிா்வாக அலுவலா் சரவணன், செவிலியா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.