கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீா் திறப்பு: ஜீரோ பாயிண்டை வந்தடைந்தது
சென்னை நகர பொதுமக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா ஆற்று நீா், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வந்தடைந்தது. இங்கிருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு நள்ளிரவு வந்து சேரும் என நீா்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னையின் முக்கிய குடிநீா் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. தற்போதைய நிலையில் கோடைக் காலம் தொடங்கி உள்ளதால் பூண்டி ஏரியின் நீா்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் தமிழகம்-ஆந்திர ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 4 டி.எம்.சி, ஜூலை முதல் அக்டோபா் வரையில் 8 டி.எம்.சி என இரு தவணைகளில் நீா் திறந்து விட வேண்டும்.
அந்த ஒப்பந்தத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து இப்பருவத்திற்கான தண்ணீரை அளிக்கும்படி ஆந்திர பொதுப்பணித்துறையினருக்கு தமிழக நீா்வளத்துறையினா் கோரிக்கை விடுத்திருந்தனா்.
இதையேற்று கடந்த 23-ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து விநாடிக்கு 500 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது. தொடா்ந்து வியாழக்கிழமை காலை முதல் 300 கன அடி தண்ணீா் கூடுதலாக அதிகரித்து 800 கன அடி நீா் வந்து கொண்டிருக்கிறது. விநாடிக்கு 800 கன அடி திறக்கப்பட்ட நிலையில் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுக்கு தண்ணீா் வந்து சோ்ந்தது.
அப்போது, கிருஷ்ணா நீரை ஆந்திர-தமிழக நீா்வளத்துறையினா் மலா் தூவி வரவேற்றனா். இந்த நிலையில் ஜீரோ பாயிண்டில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள பூண்டி ஏரிக்கு நள்ளிரவுக்கு கிருஷ்ணா நீா் வந்து சேரும் என நீா்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடியாகும். தற்போதைய நிலையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 2,684 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.