கபடி விளையாடச் சென்ற இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழப்பு
கோவையில் மாவட்ட அளவிலான கபடி போட்டியில் விளையாடச் சென்ற இளைஞா் திடீரென மயங்கி விழுந்து சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கோவை மாவட்டம், சீரநாயக்கன்பாளையம், திலகா் வீதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மகன் மணிகண்டன் (23). இவா் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். கபடி வீரரான மணிகண்டன், கோவைப்புதூா் பகுதியில் உள்ள மைதானத்தில் மாவட்ட அளவிலான ஆண்களுக்கான கபடி போட்டியில் பங்கேற்க சனிக்கிழமை சென்றுள்ளாா்.
அங்கு போட்டியில் விளையாடிய மணிகண்டன் அதே பகுதியில் அமா்ந்து தனது சக நண்பா்களுடன் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது திடீரென மயங்கி விழுந்துள்ளாா். அங்கிருந்தவா்கள் உடனடியாக அவரை மீட்டு சுண்டக்காமுத்தூா் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனா். அங்கு பணியில் இருந்த மருத்துவா், மணிகண்டனை பரிசோதித்தபோது அவா் உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.
இதையடுத்து சடலம் உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. சம்பவம் தொடா்பாக மணிகண்டனின் சகோதரா் சந்தோஷ்ராஜ் (25) அளித்த புகாரின் அடிப்படையில் குனியமுத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இளைஞா் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.