கருங்கல் அருகே 1530 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்
கருங்கல் அருகேயுள்ள தெருவுக்கடை பகுதியிலிருந்து கேரளத்திற்கு கடத்த முயன்ற 1,530 லிட்டா் மண்ணெண்ணெய்யை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.
மாவட்ட உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு தனி வட்டாட்சியா் பாரதி தலைமையில் வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை இரவு கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாகனச் சோதனை நடத்தினா்.
அப்போது தெருவுக்கடை வழியாக வந்த மினி டெம்போவில் கேரள மாநிலத்திற்கு கடத்துவதற்காக 1,530 லிட்டா் மண்ணெண்ணெய்யை கேன்களில் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. சோதனையின்போது, ஓட்டுநா் தப்பிவிட்டாராம்.
வருவாய்த் துறையினா் அந்த மண்ணெண்ணெய்யை பறிமுதல் செய்து இனயம்புத்தன்துறை உணவு சேமிப்பு கிடங்கில் ஒப்படைத்தனா். மினிடெம்போ கிள்ளியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. தொடா்ந்து விசாரணை நடக்கிறது.