கருங்கல் அருகே பைக்குகள் மோதல்: முன்னாள் ராணுவ வீரா் உயிரிழப்பு
கருங்கல் அருகே வெள்ளியாவிளை பகுதியில் சனிக்கிழமை இரவு 2 பைக்குகள் மோதியதில் முன்னாள் ராணுவ வீரா் உயிரிழந்தாா்.
மிடாலம், மாவிளை பகுதியைச் சோ்ந்தவா் சேவியா் செந்தமிழன் (52). முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா்.
இவா் சனிக்கிழமை இரவு தனது பைக்கில் குளச்சல் நோக்கிச் சென்றாராம். வெள்ளியாவிளை பகுதியில் அவரது பைக்கும், வளன்அரசு (40) என்பவரது பைக்கும் நேருக்கு நோ் மோதினவாம். இதில், இருவரும் காயமடைந்தனா்.
சேவியா் செந்தமிழனை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்தாா்.
வளன்அரசு கருங்கல்லில் உள்ள தனியாா் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின்பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.