கருணை கொண்ட கடவுள்!
ஒருமுறை சிவத்தொண்டர் வியாக்ரபாத முனிவர், தனக்கு முக்தி அளிக்குமாறு சிவனை வேண்டினார். "தன்னால் முக்தி அருள இயலாது. திருமாலைப் போற்றி வணங்கி , நிரந்தரமாக வைகுண்டத்தில் இடம் பெற ஸ்ரீரங்கத்தில் சென்று தவம் மேற்கொள்ள வேண்டும்' என சிவன் அறிவுறுத்தினார். பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதரும் ஸ்ரீரங்கம் செல்லக் கிளம்பியபோது, திசைமாறி இந்தக் கோயில் இருக்கும் இடத்துக்கு வந்து விட்டனர். தவறு உணர்ந்தவர்கள் திருமாலிடம் நிலையை விளக்கி , காட்சிதர வேண்டினர். மகிழ்ந்த திருமால், "பாலசயனம்' என்று அழைக்கப்படும் ஒரு சிறிய பாலகன் உறங்கும் வடிவில் , தூங்கும் குழந்தையைப் போல் காட்சி தந்தார்.
ஒருமுறை கருடனுக்கும், ஆதிசேஷனுக்கும் இடையே, "உயர்ந்தவர் யார்? , எவர் அதிகம் திருமாலுக்கு உதவுபவர்' என்பதில் வாக்குவாதமாகியது. இறைவன் குறிப்பிட்ட இடத்துக்கு உரிய காலத்துக்குள் செல்வதற்கு கருடன் அதிகம் பயன்படுபவதால், செருக்குடன் நடந்தார். ஆதிசேஷனுக்கு சற்று கூடுதலாக இறைவனும் பரிவைக் காட்டினார். இத்தலத்தில் முனிவர்களுக்காக, பாலக வடிவில் காட்சி தரும் திருமால் ஆதிசேஷனை உருண்டு தனக்குக் கீழே ஒளிந்து கொள்ளச் சொன்னார்.
அதனால் ஆதிசேஷன் பாலகன் உருவிலிருந்த தலசயனப் பெருமாளுக்குக் கீழ் சுருண்ட படுக்கையாக மாறி, காட்சி அளித்தார். மற்ற கோயில்களில் ஆதிசேஷன் மீது சாய்ந்துகொண்டிருக்க, கோயிலில் பூரண சயனமும் ஆதிசேஷனுக்கு அருள் வழங்கும் நோக்கில் சயனித்துகொண்டிருக்கிறார். அதனால் கருடனால் தொந்தரவு குறைந்தது.
தில்லைக்கு "புலியூர்' என்ற பெயர் உண்டு . வியாக்ரபாதரான புலிக்கால் முனிவர் தில்லையிலிருந்து முக்தி வேண்டி இங்கு வந்து ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்து முக்தி பெற்றார். சிறிய புலிக்கால் முனி அரங்கனை தரிசித்த ஊர் சிறுபுலியூரில் திரு என்ற அடைமொழி சேர்ந்து, "திருச்சிறுபுலியூர்' எனப்படுகிறது. 24}ஆவது திவ்ய தேசம்.
சுமார் 1,500 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான அரிசிலாற்றின் கரையில் 72 அடி உயரமான 5 நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. கொடி
மரம், பலி பீடம், கருடாழ்வார் சந்நிதிகள் உள்ளன. நாபியில் பிரும்மா , அருகில் ஸ்ரீதேவி பூதேவியுடன் தெற்கு நோக்கி அருள, வியாசர், வியாக்ரபாதர், கன்வ முனிவருடன் உள்ளனர். இவரை, "திருமாமகள் மருவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து அருமா கடலமுதே உனதடியே சரணாமே' என திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்கிறார்.
உற்சவர் கிருபாசமுத்திரப் பெருமாள் எனவும், தாயார் கருணை மிகுந்தவள் எனும் பொருளில் தயாநாயகி என்ற திருநாமத்தோடு எழுந்தருளியுள்ளனர். கருவறை கோஷ்டத்தில் விநாயகர், திருமால், துர்க்கை உள்ளனர். வெளிதிருச்சுற்றில் ஆண்டாள், பால ஆஞ்சனேயர், தனிக்கோயில் நாச்சியார் "திருமாமகள்' என்ற பெயரோடும் எழுந்தருளியுள்ளார்.
திருமடப்பள்ளி, திருவாய்மொழி மண்டபங்கள் உள்ளன.
ஆதிசேஷனின் தவத்தை மெச்சி இறைவன் காட்சி கொடுத்தார் என்பதால், குளத்துக்கு அருகில் தவக்கோலத்தில் காட்சி தரும் ஆதிசேஷனுக்கு தனி சந்நிதி உள்ளது. இவரை வழிபட நோய்கள் தீரும் என்பதால், பிரார்த்தனை திருமஞ்சனம் அர்ச்சனை செய்கின்றனர்.
" எப்போதும் எவ்வகை வேண்டுதல் மனப்பூர்வமாகச் செய்தாலும் கைமேல் பலன் கருணை கொண்டவர் கடவுள். குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்காக இங்கு பிரார்த்தனை செய்து பலன் பெறலாம். குறை தீர்க்கும் குணாளனை வழிபட, திருமணப் பாக்கியம், புத்திர பாக்கியம் கிடைக்கும்' என்பது ஐதீகம்.
கோயிலின் திருப்பணிகள் நிறைவு பெற்று, மகா சம்ப்ரோக்ஷணம் மார்ச் 17}ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
திருவாரூர் மாவட்டத்துக்கு உள்பட்ட நன்னிலத்தில் உள்ள கொல்லுமாங்குடி, மற்றும் காரைக்கால் அருகே திருச்சிறுபுலியூர் அமைந்துள்ளது.