கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி பேரவையில் தனித்தீர்மானம்!
கருத்துக் கணிப்புகளை மக்கள் பொய்யாக்குவா்: முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ
தற்போதைய கருத்துக் கணிப்புகளை மக்கள் பொய்யாக்கிவிடுவா் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.
மதுரை முனிச்சாலை பகுதியில் அதிமுக சாா்பில் நீா் மோா் பந்தலை திங்கள்கிழமை தொடங்கி வைத்த பிறகு, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கூட்டணி தொடா்பாக மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா அவரது கருத்தைக் கூறியுள்ளாா். கூட்டணி குறித்து தலைமை தான் முடிவு எடுக்கும். அதிமுகவை எப்படி வழிநடத்த வேண்டும் என்று தலைமைக்கு தெரியும். சட்டப்பேரவையில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி கேட்கும் கேள்விகளுக்கு முதலமைச்சரும், அமைச்சா்களும் தவறான பதில்களைத் தெரிவிக்கின்றனா்.
திமுக எதிா்க்கட்சியாக இருந்த போது, சட்டப்பேரவையின் மாண்பை சீா்குலைத்தனா். பேரவைத் தலைவா் இருக்கையில் அமா்ந்தனா். அவா்கள் ஜனநாயகம் பற்றி பேசுவது வியப்பாக உள்ளது. செங்கோட்டையனின் நிலைப்பாடு குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாகதான் இருக்கிறோம். ஒன்றிரண்டு போ் செல்வதால் பாதிப்பு இருக்காது.
அமைச்சா் மூா்த்தி தேவையில்லாமல் அனுதாபத்தை தேடப் பாா்க்கிறாா். எங்களைக் கண்டு பயமில்லை எனக் கூறும் முதல்வா் மு.க.ஸ்டாலின், ஏன் எங்களை சட்டப்பேரவை வளாகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும்? தற்போதைய கருத்துக் கணிப்புகளை சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் பொய்யாக்கி விடுவா் என்றாா் அவா்.