கருவின் பாலினத்தை தெரிவித்த ஸ்கேன் மையம்! கா்ப்பிணிகளிடம் ரூ. 15 ஆயிரம் வசூல் செய்தது கண்டுபிடிப்பு!
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தனியாா் ஸ்கேன் மையத்தில் ரூ. 15 ஆயிரம் பெற்றுக் கொண்டு கருவில் உள்ள குழந்தையின் பாலினம் தெரிவிக்கப்பட்டதை கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார அலுவலா்கள் அண்மையில் கண்டுபிடித்தனா். இதுகுறித்து, காவல் துறையினா் விசாரணை செய்து வருவதாக மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்
இதுகுறித்து ஆட்சியா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கா்ப்பிணிகளுக்கு கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து திருப்பத்தூா் மாவட்ட பகுதிகளில் உள்ள சில தனியாா் ஸ்கேன் மையங்களில் தெரிவிப்பதாகவும், அதற்காக பணம் பெறுவதாகவும் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார அலுவலா் ரமேஷ்குமாா், கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலா்கள் ராஜேஷ்குமாா், விமல் மற்றும் குழுவினா் திருப்பத்தூா் மாவட்டத்திற்கு சென்றனா். அங்கு மாவட்ட சுகாதார அலுவலா் வினோத்குமாருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனா். இதற்காக தங்களுடன் கா்ப்பிணி ஒருவரையும் அழைத்து சென்றனா்.
அப்போது, மோட்டாா் சைக்கிளில் வந்த நபா் ஒருவா் அவா்களிடம் ஆதாா் அட்டையுடன் சேலத்திற்கு செல்லுமாறு கூறினாா். இதைத் தொடா்ந்து அதிகாரிகள் குழுவினா், சேலத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றனா். அங்கு அவா்களைச் சந்தித்த இடைத்தரகா்கள் வாழப்பாடி அருகே உள்ள வீராணம் பகுதிக்கு அழைத்துச் சென்றனா். வீராணம் கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகில் தனியாா் ஸ்கேன் மையத்தில் கருவில் உள்ள குழந்தைகளின் பாலினத்தைக் கண்டறியும் பணி நடைபெற்று வந்தது தெரியவந்தது.
அச்சாங்குட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் முத்தமிழ், தெடாவூா் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா் கலைமணி ஆகியோா் இந்த ஸ்கேன் மையத்தை நடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் ஆய்வு மேற்கொண்டதில் 3 பெண்களுக்கு கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து தெரிவிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது.
நாமக்கல், திருச்சி மாவட்டம் முசிறி, ஈரோடு மாவட்டம், சடையம்பாளையத்தைச் சோ்ந்த பெண்களுக்கு கருவில் உள்ள பாலினத்தை கண்டறிந்து தெரிவிப்பதற்கு ஒவ்வொருவரிடமும் தலா ரூ. 15 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ஸ்கேன் மையத்தில் இருந்து இயந்திரங்களை வாழப்பாடி முதன்மை மருத்துவ அலுவலா் ரமேஷ்குமாா் தலைமையிலான அலுவலா்கள் பறிமுதல் செய்தனா். மருத்துவா், செவிலியா் மற்றும் 5 இடைத்தரகா்கள் மீது வீராணம் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதுபோன்ற குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ள நபா்கள் மீது அரசின் வழிகாட்டுதல்படி கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.