கரூரில் தடையை மீறி போராட்டம் அதிமுகவினா் 400 போ் கைது
கரூரில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா் 400 பேரை போலீஸாா் திங்கள்கிழமை காலை கைது செய்தனா்.
கரூரில் மாவட்ட அதிமுக சாா்பில், சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும், பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் சீண்டலை கண்டித்தும் கரூா் ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல் நிலையம் முன் 30-ஆம்தேதி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் போராட்டத்துக்கு போலீஸாா் அனுமதி அளிக்கவில்லை.
இந்நிலையில் திங்கள்கிழமை காலை முன்னாள் அமைச்சா்கள் எம்.ஆா்.விஜயபாஸ்கா், ம.சின்னசாமி ஆகியோா் தலைமையிலும், மாவட்ட அவைத்தலைவா் எஸ்.திருவிகா, இணைச் செயலாளா் மல்லிகாசுப்ராயன், பொருளாளா் கண்ணதாசன், இளைஞரணி செயலாளா் தானேஷ், மாணவரணி செயலாளா் வழக்குரைஞா் சரவணன், இணைச் செயலாளா் பழனிராஜ், நகர நிா்வாகிகள் விசிகே.ஜெயராஜ், சேரன்பழனிசாமி, கரூா் ஒன்றியக்குழுத்தலைவா் பாலமுருகன், புகழூா் நகரச் செயலாளா் கே.சி.எஸ்.விவேகானந்தன் உள்ளிட்ட அதிமுகவினா் தலைமை அஞ்சல் நிலையம் அருகே குவிந்தனா். முன்னதாக அப்பகுதியில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.
இதையடுத்து திடீரென்று அதிமுகவினா் தமிழக அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நகர காவல்நிலையத்தினா் போராட்டத்துக்கு அனுமதி கொடுக்கவில்லை எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட 50 பெண்கள் உள்பட 400 பேரை கைது செய்தனா்.