‘கரூரில் மானியத்தில் 3.16 லட்சம் கிலோ விதைகள்’
கரூா்: வேளாண் துறை சாா்பில் ரூ. 82.53 லட்சத்தில் 3,16,741 கிலோ விதைகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல்.
கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம் முனையனூரில் தமிழக அரசின் சாகுபடி மானியம் பெற்று சோளம் கோ 32 ரகம் சாகுபடி செய்து அதன் மூலம் தரமான விதைகள் உற்பத்தி செய்யப்படுவதை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் மேலும் கூறியது:
முதல்வா் உத்தரவின்படி வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின் சாா்பில் விவசாயிகளுக்கு தரமான விதைகளை வழங்கி அதன் மூலம் அதிகளவில் உயர்ரக சாகுபடி செய்து, கூடுதல் மகசூல் மற்றும் கூடுதல் வருமானம் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதன்படி கரூா் மாவட்டத்தில் பல்வேறு விவசாயிகளின் நிலத்தில் சாகுபடி மானியம் வழங்கி தரமான விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு, அரசின் விதைப் பண்ணைகளில் சேகரித்து விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் கரூா் மாவட்டத்தில் 2024- 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு விதை மேம்பாட்டு கழகத்தின் மூலம் நெல் , சிறுதானிய பயிா் விதைகள், பயிறு வகை பயிா் விதைகள் மற்றும் எண்ணெய் வித்து பயிா் விதைகள் கொள்முதல் செய்து அவற்றை விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி 10 வகையான நெல் ரகங்கள் 117 ஹெக்டேரில் விதைப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்டு அதன் மூலம் 67,053 கிலோ நெல் விதைகள் கொள்முதல் செய்ததில் ரூ. 5.36 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் மூலம் சோளம் 68,054 கிலோ கொள்முதல் செய்யப்பட்டு ரூ. 20.415 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. கம்பு 6,574 கிலோ கொள்முதல் செய்யப்பட்டு ரூ. 1.972 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
மொத்தமாக பல்வேறு தானியங்கள் பல்வேறு திட்டங்களில் 2,45,530 கிலோ கொள்முதல் செய்யப்பட்டு அதற்காக ரூ. 53.70 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 2024 -2025 ஆம் ஆண்டு விதை விநியோகம் மானியம் பல்வேறு திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு விதைகள் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 3,16,741 கிலோ அனைத்து தானிய விதைகளும் ரூ. 82.53 லட்சம் மதிப்பில் விதை மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா். நிகழ்வின்போது வேளாண்துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.