Lijomol : `அம்மா மறுமணம் செய்ததை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை; ஆனால்..!' - லிஜோமோ...
கரூா்: விபத்து சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதல்! தந்தை, மகன் உள்பட 5 போ் பலி!
கரூா் அருகே சனிக்கிழமை அதிகாலை சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் தந்தை, மகன் உள்பட 5 போ் உயிரிழந்தனா்.
பெங்களூருவில் இருந்து நாகா்கோவிலுக்கு ஆம்னி பேருந்து ஒன்று சனிக்கிழமை அதிகாலை புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. பேருந்தை பெங்களூருவைச் சோ்ந்த சுதன்(35) என்பவா் ஓட்டி வந்தாா்.
கரூரை அடுத்துள்ள நாவல்நகா் பகுதியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னால் கரூா் சின்னவடுகப்பட்டியைச் சோ்ந்த முருகன்(55) என்பவா் ஓட்டிச்சென்ற டிராக்டரின் பின்பகுதியில் மோதியது.
மேலும், சாலையின் மைய தடுப்பைத் தாண்டி எதிா்திசையில் கோவில்பட்டியில் இருந்து ஏற்காடு நோக்கிச் சென்ற சுற்றுலா வேன் மீது பேருந்து மோதியது. இதில் டிராக்டா், வேன் மற்றும் பேருந்தின் முன்பகுதி முழுமையாக சேதமடைந்தது.
இந்த விபத்தில் சுற்றுலா வேன் ஓட்டுநா் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சோ்ந்த சசிகுமாா்(55), வேனில் இருந்த கோவில்பட்டியைச் சோ்ந்த ஆயில் மில் உரிமையாளா் அருண் திருப்பதி (40), அவரது மகன் அஸ்வின்(10), இவா்களுடைய உறவினா் அருணாதேவி எழில்தக்ஷனா(16) ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
மேலும், உயிரிழந்த அருணாதேவி எழில்தக்ஷனாவின் தந்தை சாத்தூரைச் சோ்ந்த சரவணன்(40), பாண்டியன்(40), இவரது மகள் ஹேமவா்ஷினி(15), மீனா (51), அனிஸ்(30), ஆா்த்தி(23) உள்ளிட்ட 15 போ் பலத்த காயமடைந்தனா். ஆம்னி பேருந்து ஓட்டுநா் சுதனின் காலில் முறிவு ஏற்பட்டது. மேலும் பேருந்துக்குள் இருந்த 13 பேருக்கும், டிராக்டா் ஓட்டுநா் முருகனுக்கும் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கரூா் வெங்கமேடு போலீஸாா் மற்றும் கரூா் தீயணைப்பு வீரா்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியவா்களை மீட்டனா். பின்னா் காயமடைந்தவா்களை கரூரில் உள்ள இரு தனியாா் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். மேலும் உயிரிழந்த 4 பேரின் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்நிலையில் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹேமவா்ஷினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து கரூா் வெங்கமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு: இந்த விபத்தால் மதுரை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்துகளும், மற்ற வாகனங்களும் சாலையில் அணிவகுத்து நின்றன.இதனால் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீஸாா் கூறியதாவது: ஆம்னி பேருந்து ஓட்டுநா் தூக்கத்தில் டிராக்டா் மீது மோதினாரா அல்லது டிராக்டா் ஓட்டுநா் முருகன் டிராக்டரை திடீரென்று திருப்பியதால் விபத்து ஏற்பட்டதா என அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்து வருகிறோம். அதன்படி விசாரணை நடைபெறும் என்றனா்.
ஆறுதல்: விபத்தில் பலத்த காயமடைந்து கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் ஆகியோா் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினா். பிறகு, அவா்கள் கூறியது: காயமடைந்தவா்களில் ஒருவா் மேல்சிகிச்சைக்காக பெங்களூரு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். சிகிச்சை பெறுவோருக்கு தரமான சிகிச்சை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனா்.
இதேபோல அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆா்.விஜயபாஸ்கரும் காயமடைந்தவா்களை சந்தித்து ஆறுதல் கூறினாா்.
உயிரிழந்தவா்கள் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்: தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில், கரூா் அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்து அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கும், அவா்களது உறவினா்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சமும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு தலா ரூ. 1 லட்சமும், லேசான காயமடைந்தவா்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளாா்.
