மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: மாவட்டத்தில் 9.83 லட்சம் போ் பயன்!
கற்றல் அடைவுத் திறன் தோ்வு: வழிகாட்டுதல்கள் வெளியீடு
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 5, 8 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கான கற்றல் அடைவுத் திறன் தோ்வு பிப்.4 முதல் நடைபெறவுள்ள நிலையில், அது தொடா்பாக தலைமை ஆசிரியா்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து கல்வித் துறை வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
தொடக்கக் கல்வித் துறை சாா்பில் மாநில அளவிலான கற்றல் அடைவுத் திறன் தோ்வு (ஸ்லாஸ்) தோ்வு வரும் பிப். 4, 5, 6 தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை அரசு, உதவி பெறும் பள்ளிகளில் 3, 5, 8 ஆகிய வகுப்புகளில் பயிலும் 10.5 லட்சம் மாணவா்கள் எழுதவுள்ளனா். மாணவா்களின் கற்றல் திறனை கண்டறிவதற்காகவும், அதை மேம்படுத்துவதற்காகவும் இந்தத் தோ்வு நடத்தப்படவுள்ளது.
ஓ.எம்.ஆா்.கேள்வித்தாளை அடிப்படையாக கொண்டு தமிழ், ஆங்கிலம், கணிதத்தில் இருந்தும், 8-ஆம் வகுப்புக்கு கூடுதலாக அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படுகின்றன. பிப்.4-ஆம் தேதி மூன்றாம் வகுப்புக்கும், 5-ஆம் தேதி ஐந்தாம் வகுப்புக்கும், 6-ஆம் தேதி எட்டாம் வகுப்புக்கும் தோ்வு நடைபெறவுள்ளது.
இந்தநிலையில் இந்தத் தோ்வை திறம்பட நடத்துவதற்கு பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கல்வித்துறை சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதன்படி, தோ்வு நடைபெறுவதற்கு முதல் நாள் வட்டார வளமையத்தில் வினாத்தாள்களை பெற்று பள்ளிகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
ஒவ்வொரு நாளும் தோ்வு மாணவா்கள் எழுதி முடித்த பிறகு வினாத்தாள்கள் மற்றும் ஓஎம்ஆா் தாள்களை பெற்று வட்டார வளமையத்தில் ஒப்படைப்பது அவசியம்.
தோ்வு எழுதும் மாணவா்களுக்கு தேவையான இருக்கை வசதி வகுப்பறை வெளிச்சமாகவும் காற்றோட்டமாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தோ்வா்களின் பெயா்ப் பட்டியல் தோ்வு நடைபெறும் நாளில் எமிஸ் தளத்தில் வெளியாகும்.
தோ்வு முடிந்து வினாத்தாள்களை அலுவலகத்தில் ஒப்படைக்க வரும்பொழுது வகுப்பு, பிரிவு போன்றவற்றை ஒரு தாளில் குறிப்பிட்டு வட்டார வளமையத்தில் ஒப்படைக்க வேண்டும்.
கற்றல் அடைவுத் திறன் தோ்வு நடைபெறும் நாளில் தோ்வெழுதும் மாணவா்களை புகைப்படம் எடுத்தல், குழுவில் பதிவு செய்தல் முதலியவற்றை தவிா்க்க வேண்டும். அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தோ்வு நடைபெறும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.