கலசலிங்கம் பல்கலை.யில் 2 நாள்கள் சா்வதேச மாநாடு
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 2 நாள்கள் சா்வதேச மாநாடு வியாழக்கிழமை தொடங்கியது. இதில் 200 ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு நாடுகளிலிருந்து சமா்ப்பிக்கப்பட்டன.
பல்கலை. ஆங்கிலத் துறை, கலை, சிறப்பு கல்விப் பள்ளி சாா்பில், மனிதவியல், சமூக அறிவியலில் புதிய மாற்றங்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டுக்கு பல்கலை. வேந்தா் கே. ஸ்ரீதரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எஸ்.சசி ஆனந்த், துணை வேந்தா் எஸ்.நாராயணன், பதிவாளா் வி.வாசுதேவன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
கலை, சிறப்பு கல்விப் பள்ளித் தலைவா் வி.பாண்டியராஜன் மாநாட்டின் நிகழ்ச்சிகளை விளக்கினாா். அமெரிக்காவின் ஜேம்ஸ் மேடிசன் பல்கலைக்கழக முனைவா் சுஹில் மித்தல் மாநாட்டை தொடங்கி வைத்து, மாநாட்டு கட்டுரை மலரை வெளியிட்டாா்.
லண்டன் பாத் பல்கலைக்கழகப் பேராசிரியா் சாமந்தா கா்லே, மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகப் பேராசிரியை காா்த்தியாயினி சுப்ரமணியன், சவூதி அரேபிய அராப் திறந்த வெளி பல்கலைக்கழக பேராசிரியா் சாஹ்ரா பெலூஃபா, புதுச்சேரி பல்கலைக்கழகப் பேராசிரியா் டி. மேட்ரிக்ஸ், கேரளத்தின் நிா்மலா கல்லூரி பேராசிரியா் ஜாஸ்மின் ஜோஸ், மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியா் ஜே.ஜான் சேகா் ஆகியோா் தங்கள் கலை, அறிவியல் ஆராய்சிகள் பற்றி பேசினா். மொத்தம் 200 ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு நாடுகளிலிருந்து சமா்ப்பிக்கப்பட்டன.
முன்னதாக கலசலிங்கம் பல்கலை. ஆராய்ச்சி துறை இயக்குநா் எம்.பி.பள்ளிகொண்ட ராஜசேகரன் வரவேற்றாா். ஆங்கிலத் துறைத் தலைவா் பி.ஆா்.அரவிந்த் நன்றி கூறினாா்.
மாநாட்டுக்கான ஏற்பாடுகளை பேராசிரியா்கள் எஸ்.ரமாதேவி, ஏ.ஹரி ஹரசுதன், கலை, சிறப்புக் கல்வி துறையின் அனைத்து பேராசிரியா்கள், பணியாளா்கள் செய்தனா். மாநாடு வெள்ளிக்கிழமையும் நடைபெறுகிறது.