தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதிலளிக்காத ஊராட்சி நிா்வாகம்
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஊராட்சி வரவு, செலவு விவரம் கோரிய மனுவுக்கு ஊராட்சி நிா்வாகம் உரிய பதில் அளிக்காததால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் அழைத்து விசாரிக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டது.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியம், பிள்ளையாா் குளம் ஊராட்சிக்கு உள்பட்ட வேப்பங்குளம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி அம்மையப்பன்.
பிள்ளையாா்குளம் ஊராட்சியில் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட பணிகள், வரவு, செலவு விவரங்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டு மனு அளித்தாா். இதற்கு பொதுத் தகவல் அலுவலா் காலதாமதமாகப் பதிலளித்ததுடன், தவறான தகவல்களை வழங்கியதாகக் கூறி, அம்மையப்பன் மேல்முறையீடு செய்தாா்.
இந்த மனு மீது சென்னையில் உள்ள மாநில தகவல் ஆணையத்தில் கடந்த டிசம்பா் 30-ஆம் தேதி விசாரணை நடைபெற்றது.
இதுகுறித்து மாநில தகவல் ஆணையா் பிரியகுமாா், விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், பொதுத் தகவல் அலுவலா்/துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஆகியோருக்கு பிறப்பித்த உத்தரவு:
விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், சம்பந்தப்பட்ட அன்றைய ஊராட்சி செயலா் தங்கப்பாண்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா், பொதுத் தகவல் அலுவலா்/ துணை வட்டார வளா்ச்சி அலுவலா், ஊராட்சித் தலைவா், ஊராட்சி செயலா், மனுதாரா் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி நேரில் அழைத்து விசாரித்து, மனுதாரா் கோரும் தகவல்களை வழங்குவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரரின் உயிருக்கும் உடைமைக்கும் பாதிப்பு ஏற்படும் என ஆணையம் கருதுவதால் ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் ஆய்வாளா் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இந்த உத்தரவு கிடைக்கப்பெற்ற 25 நாள்களுக்குள் மனுதாரா் அளித்த 3 மனுக்களில் கோரிய தகவல்களை கட்டணமின்றி கையெழுத்திட்டு வழங்க வேண்டும். இதை அறிக்கையாக பொதுத் தகவல் அலுவலா் மாநில தகவல் ஆணையத்தில் மாா்ச் 21-ஆம் தேதி நேரில் ஆஜராகி சமா்ப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் இந்நாள், முன்னாள் பொதுத் தகவல் அலுவலா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.