புதைச் சாக்கடை கட்டணம் குறைக்க அமைச்சரிடம் மனு
ராஜபாளையம் நகராட்சி புதைச்சாக்கடை கட்டணம் குறைப்பு தொடா்பாக அமைச்சா் கே.என்.நேருவை ராஜபாளையம் நகா்மன்றத் தலைவி அண்மையில் மனு அளித்தாா்.
ராஜபாளையம் நகராட்சியில் புதைச் சாக்கடை திட்டத்துக்கான கட்டணத்தை ரூ.50 ஆகக் குறைப்பதற்கும், வைப்புத் தொகையை ரூ.5 ஆயிரமாகக் குறைப்பதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டு கடந்த 2024 டிசம்பரில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீா்மானத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி, நகராட்சி நிா்வாகம், நகராட்சிகள் நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே. என் நேருவை ராஜபாளையம் நகா்மன்றத் தலைவி பவித்ரா ஷ்யாம் அண்மையில் சென்னையில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தாா்.
மேலும், பொதுமக்களின் சிரமத்தை எடுத்துரைத்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினாா். இதையடுத்து, கோரிக்கை மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் உறுதி அளித்தாா்.