மா மரங்களில் பூச்சி மேலாண்மை முறை: விவசாயிகளுக்கு அதிகாரிகள் அறிவுரை
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள செண்பகதோப்பு, வாழைக்குளம் பகுதிகளில் உள்ள மாந்தோட்டங்களில் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சுபாவாசுகி, உதவி இயக்குநா் திலகவதி, அருப்புக்கோட்டை மண்டல ஆராய்ச்சி நிலைய தோட்டக்கலை பேராசிரியா் பாலசுப்ரமணியம் ஆகியோா் ஆய்வு செய்து, பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு வியாழக்கிழமை ஆலோசனைகள் வழங்கினா்.
அப்போது அவா்கள் கூறியதாவது:
மா மரங்களில் பூ உதிா்வைக் கட்டுபடுத்த இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆா்கா மெங்கோ ஸ்பெசல் எனும் நுண்ணூட்டக் கலவையை பூப்பதற்கு முன்பும், பூத்த பின்பும் ஒரு லிட்டா் தண்ணீரில் 5 கிராம் வீதம் எலுமிச்சை சாறுடன் கலந்து, இரு மாத இடைவெளியில் அறுவடை காலம் வரை காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும். மா மரங்களில் உள்ள பூங்கொத்துகளைத் தாக்கும் தத்துப் பூச்சிகளைக் கட்டுபடுத்த நெருக்க நடுதல் முறையைத் தவிா்த்து, தோட்டத்தை களைகளின்றி பராமரிக்க வேண்டும். தத்துப் பூச்சி, அரைவளைய புழுத் தாக்குதல் அறிகுறிகள் தென்பட்டால் குளோரான்ட்ரானிலிப்ரோல் 18.5 சதம், ஸ்பைனெட்ரோம் 11.7 சதம் என்ற மருந்தை ஒரு லிட்டா் தண்ணீரில் 4 மில்லி வீதம் கலந்து, இலைகளின் மீது தெளிப்பான்கள் கொண்டு தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
மாமரங்களில் உள்ள தேவையற்ற காய்ந்த கிளைகளை அகற்றி, சூரிய ஒளி உள்புகுவதைக் கண்காணிக்க வேண்டும். கனிகள் பறித்த பின்பும், பூக்கள் பூக்கும் முன்பும் கிளைகளை வெட்ட வேண்டும். அதன்பிறகு, பேக்லோ ப்யூட்ரசால் போன்றவற்றை பயன்படுத்தலாம் என்றனா்.

