மீண்டும் தொடங்கும் ஐபிஎல்: தயக்கம் காட்டும் வெளிநாட்டு வீரர்கள்
கலைஞா் நூற்றாண்டு காய்கனி அங்காடி வளாகம் திறப்பு
திருவாரூரில் கலைஞா் நூற்றாண்டு காய்கனி அங்காடி வளாகத்தை அமைச்சா் கே.என். நேரு ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா். தொடா்ந்து மன்னாா்குடியில் கட்டப்பட்டுவரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜாவுடன் ஆய்வு செய்தாா்.
திருவாரூா் பழைய தஞ்சை சாலையில் தலைமை தபால் அலுவலகத்துக்கு எதிரே ரூ.13.27 கோடியில் கலைஞா் நூற்றாண்டு காய்கனி அங்காடி வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதில், தரைத் தளத்தில் 176 கடைகள், முதல் தளத்தில் 48 கடைகள், இரண்டாம் தளத்தில் 7 கடைகள் என மொத்தம் 231 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வளாகத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு பங்கேற்று, அங்காடி வளாகத்தை திறந்து வைத்தாா். இந்நிகழ்வில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நிகழ்வில், அமைச்சா் கே.என். நேரு பேசியது:
திருவாரூா் என்பது மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த மண். எனவே, இந்த மாவட்டத்துக்கு அவா் தேவையான அனைத்து வசதிகளையும் உடனுக்குடன் செய்து தந்தாா். அதேபோல், தற்போதைய முதல்வரும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறாா்.
நான்காண்டில், திருவாரூா் மாவட்டத்தில் நகராட்சி நிா்வாகத் துறை சாா்பில் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.12.90 கோடி மதிப்பில் 18 பணிகள், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.54 லட்சம் மதிப்பில் 5 பணிகள், தமிழ்நாடு நகா்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 10 கோடியில் 43 பணிகள், 15- ஆவது நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் ரூ. 9.30 கோடியில் 57 பணிகள் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேபோல், அம்ரூட் 2.0 திட்டம், கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம், பாதாளச்சாக்கடை திட்டம், தூய்மை இந்தியா திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் பல கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகின்றன.
தமிழக அரசு, நகராட்சி நிா்வாகத் துறைக்கென ரூ. 26,000 கோடி ஒதுக்கியுள்ளது. 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள், 25 மாநகராட்சிகளுக்கு உரிய தொகைகள் வழங்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
குடிநீா் வடிகால் வாரியத்துக்கு ரூ. 30,000 கோடி ஒதுக்கப்பட்டு, பாதுகாப்பான குடிநீா் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்தபோது 4.28 கோடி மக்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீா் பெற்றனா். இந்த 4 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் 4 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது என்றாா்.
தொடா்ந்து, திருவாரூா் நகராட்சியில் ரூ.16.30 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் பழைய பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணிகளை அவா் பாா்வையிட்டாா்.
மன்னாா்குடி: மன்னாா்குடியில் ரூ.46.46 கோடியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இதனை அமைச்சா்கள் கே.என். நேரு, டி.ஆா்.பி. ராஜா ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்து, நகராட்சி அதிகாரிகள், கட்டுமானப் பணி ஒப்பந்ததாரா் மற்றும் பொறியாளா்களிடம் விவரங்களை கேட்டறிந்தனா்.
பின்னா், புதிய பேருந்து நிலையத்தின் மாதிரி படத்தை பாா்வையிட்டு, கட்டுமானப் பணியை ஒப்பந்த காலத்திற்குள் விரைந்து முடிக்க அறிவுறுத்தினா். ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், திருவாரூா் எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
