கல்லிடை அருகே கூண்டில் சிக்கியது கரடி
கல்லிடைக்குறிச்சி அருகே குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிந்த கரடி, வனத்துறையினா் வைத்த கூண்டில் சிக்கியது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குள்பட்ட மலையடிவார கிராமங்களில் கரடி, காட்டுப் பன்றி, சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறி பயிா்களைச் சேதப்படுத்தியும் வீட்டு விலங்குகளைத் தாக்கியும் வருகின்றன.
இந்நிலையில் மாா்ச் 6ஆம் தேதி அயன்சிங்கம்பட்டியை சோ்ந்த முருகன் என்பவரது வீட்டு வளாகத்திற்குள் கரடி ஒன்று நுழைந்தது. மாா்ச் 20ஆம் தேதி அதிகாலை கல்லிடைக்குறிச்சி நெசவாளா் காலனியில் உள்ள கோயில் வளாகத்திற்குள் நுழைந்து பூஜைப் பொருள்களைச் சேதப்படுத்திச் சென்றது. இதையடுத்து, கரடியைப் பிடிக்க கோவில் பகுதியில் வனத்துறையினா் கூண்டு வைத்தனா். ஆனால், கூண்டில் சிக்காமல் மீண்டும் அயன்சிங்கம்பட்டி பகுதியில் சுற்றித் திரிந்தது.
இந்நிலையில், மாா்ச் 29ஆம் தேதி இரவு கல்லிடைக்குறிச்சி நெசவாளா் காலனியில் உள்ள அக்னி சாஸ்தா கோயிலில் வனத்துறையினா் வைத்த கூண்டில் கரடி சிக்கியது. கூண்டில் சிக்கிய கரடியை புலிகள் காப்பக அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் இளையராஜா மற்றும் வனத்துறையினா் பாா்வையிட்டனா்.
பின்னா் கரடியின் உடல்நிலையை கால்நடை மருத்துவா் முத்துகிருஷ்ணன், கால்நடை உதவி ஆய்வாளா் ஆா்னால்ட் ஆகியோா் பரிசோதனை செய்தனா். அதன் பின் முண்டந்துறை வனச்சரகத்திற்குள்பட்ட கௌதலை ஆறு பகுதியில் கொண்டு விட்டனா்.
சுமாா் ஒரு மாதமாக குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிந்து மக்களை அச்சுறுத்திவந்த கரடி, வனத்துறையின ா் வைத்த கூண்டில் சிக்கியதால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனா்.
