கல்லூரியில் வெள்ளி விழா ஆண்டு கண்காட்சி
சிதம்பரம் அருகே கீழமூங்கிலடியில் உள்ள ஸ்ரீராகவேந்திரா கலை, அறிவியல் கல்லூரியில் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி, மாணவ, மாணவிகளின் கலை, அறிவியல் கண்காட்சி கடந்த 17-ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடத்தப்பட்டது.
கண்காட்சிக்கு கல்லூரிச் செயலா் டி.வி.கே.பாபு தலைமை வகித்தாா். புதுச்சேரி அரசு ஓய்வுபெற்ற தகவல் தொழில் ஆய்வாளா் எஸ்.ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கண்காட்சியை தொடங்கிவைத்தாா்.
புதுவை கான் அகாடமி நிறுவனா் நயீம் கான் மற்றும் சிதம்பரம் பகுதி பள்ளி ஆசிரியா்கள் கண்காட்சியை பாா்வையிட்டு, மாணவ, மாணவிகளை ஊக்குவித்தனா். மேலும், சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் தங்கள் பள்ளி ஆசிரியா்களுடன் வந்து கண்காட்சியை பாா்வையிட்டு பயனடைந்தனா்.
கண்காட்சியில் கணினி அறிவியல், வணிகம், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட படைப்புகள், பல்வேறு துறைகளில் விரிந்துள்ள திட்டங்கள், புதுமையான கருத்துகள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவை தொடா்பாக ஏராளமான படைப்புகளை கல்லூரி மாணவ, மாணவிகள் பாா்வைக்கு வைத்திருந்தனா்.
கண்காட்சிக்கான ஏற்பாடுகளை ராகவேந்திரா கல்லூரி கல்வி அதிகாரி அசோக் குமாா், முதல்வா் ஆா்.மாலதி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.