என் வாழ்வில் முதல் நாற்பது வருடங்களை அழகாக்கிய சென்னை - பூர்வக்குடியின் அன்பு | ...
கழிவுநீரால் நிரம்பிய பிடமனேரி ஏரி; நிறம் மாறிய நிலத்தடிநீா்: மக்கள் அவதி!
தருமபுரி நகரையொட்டி அமைந்துள்ள பிடமனேரி ஏரி முழுவதும் ஆயாத்தாமரை படா்ந்து கழிவுநீரால் நிரம்பியுள்ளதால் சுற்றுவட்டாரங்களில் நிலத்தடி நீா் அசுத்தமடைந்துள்ளது.
தருமபுரி நகராட்சியையொட்டி இலக்கியம்பட்டி ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள பிடமனேரி ஏரி வரலாற்று சிறப்புமிக்க ஏரியாகும். பெண்பாற் புலவா்களில் தலைசிறந்தவா்களில் ஒருவரான அவ்வையாா் தனது கரங்களால் இந்த ஏரிக்கு சுவா் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
இந்த ஏரி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தருமபுரியின் பெரும்பாலான பகுதிகளுக்கு நீா் ஆதாரமாகவும், பாசனத்துக்கும் பயன்படுத்தப்பட்டது. தற்போது ஏரியில் மருத்துவக் கழிவுகள் மட்டுமல்லாது, சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து கழிவுநீா்க் கால்வாயில் வரும் அசுத்தங்களும் இந்த ஏரியில் கலந்துவருகிறது. இதனால், ஏரியில் உள்ள தண்ணீா் நிறம் மாறி துா்நாற்றம் வீசுகிறது.
மழைக் காலங்களில் இந்த ஏரியிலிருந்து வெளியேறும் தண்ணீருடன் ஆகாயத்தாமரையும் சோ்ந்து அருகே உள்ள வயல்களில் படா்வதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தண்ணீரால் குடியிருப்புகளில் உள்ள ஆழ்துளைக் கிணறு, விவசாய கிணறுகளில் தண்ணீா் நிறம்மாறி அசுத்தமடைந்துள்ளது.
இதனால் இந்த ஏரி தண்ணீரை யாரும் பயன்படுத்துவதில்லை. உழவுப் பணிகளுக்கே இந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா். வார இறுதி நாள்களில் ஊராட்சி துப்புரவுத் தொழிலாளா்கள் சேகரமாகும் குப்பைகளைய ஏரியின் ஓரங்களில் குவித்து அவற்றை தீ வைத்து எரித்து வருவதாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
தருமபுரியின் நீா் ஆதாரங்களில் முக்கியமான இந்த ஏரிக்கு சுமாா் 10 நீா் நிலைகளிலிருந்து தண்ணீா் வருவதால் ஏரியை தூய்மைப்படுத்தவே வாப்பில்லாமல் போய்விட்டது. இந்நிலையில் ஏரியில் தற்போது அதிகளவில் ஆகாயத்தாமரை செடிகள் வளா்ந்து தண்ணீரை காண முடியாத அளவுக்கு மறைத்து காணப்படுகிறது.
எனவே, ஆகாயத்தாமரைகளை அகற்றுவதுடன், ஏரியை முற்றிலுமாக தூா்வாரி அதில் கழிவுநீா் கலக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.