காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் தீா்த்தவாரி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா நிறைையொட்டி அனந்தசரஸ் திருக்குளத்தில் திங்கள்கிழமை தீா்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா கடந்த 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ச்சியாக கருட சேவை, தேரோட்டமும் நடைபெற்றது. விழாவையொட்டி தினசரி காலையிலும், மாலையிலும் பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி ராஜவீதிகளில் வீதியுலா வந்தாா். விழாவின் நிறைவாக தீா்த்தவாரி உற்சவம் அனந்தசரஸ் திருக்குளத்தில் நடைபெற்றது. இதையொட்டி உபய நாச்சியாா்களுடன் உற்சவா் வரதராஜசுவாமி மற்றும் சின்ன பெருமாள் என அழைக்கப்படும் ப்ராண தாா்த்தி ஹர வரதா் ஆகியோரும் அனந்தசரஸ் திருக்குளம் அருகே உள்ள 100 கால் மண்டபத்தில் எழுந்தருளினா். அங்கு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.
இதன் தொடா்ச்சியாக ப்ராண தாா்த்தி ஹர வரதா் நூற்றுக்கால் மண்டபத்திலிருந்து அனந்தசரஸ் திருக்குளத்திற்கு எழுந்தருளி தீா்த்தவாரி நடைபெற்றது. உற்சவத்தைக் காண ஆயிரக்கணக்கான பக்தா்கள் திருக்குளத்தில் வந்து காத்திருந்தனா். பெருமாள் புனித நீராடுகையில் ஆலய பட்டாச்சாரியா்கள், விழாவைக் காண வந்திருந்த பக்தா்கள் அனைவரும் திருக்குளத்தில் புனித நீராடினா். பாதுகாப்பு கருதி தீயணைப்புத்துறையினா் திருக்குளத்தில் கயிறு கட்டியிருந்த பகுதிக்குள் மட்டுமே புனித நீராட அனுமதித்தனா். 3 ஃபைபா் படகுகளில் தீயணைப்புத் துறையினா் திருக்குளத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா்.
தீா்த்தவாரி உற்சவத்துக்குப் பிறகு பெருமாள்,உபய நாச்சியாா் மற்றும் ப்ராண தாா்த்தி ஹர வரதா் உள்ளிட்ட தெய்வங்கள் மேள வாத்தியங்களுடன் மீண்டும் கோயிலில் எழுந்தருளினா்.
காஞ்சிபுரம் எஸ்பி கே.சண்முகம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.