காட்டுப் பன்றியை தாக்கிக் கொன்ற சிறுத்தை
குன்னூா் அருகே குடியிருப்புப் பகுதியில் காட்டுப் பன்றியை தாக்கிக் கொன்ற சிறுத்தையால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
குன்னூா், வெலிங்டன் தனியாா் பள்ளி அருகேயுள்ள குடியிருப்புப் பகுதியில் திங்கள்கிழமை நுழைந்த சிறுத்தை அங்கிருந்த நாயை துரத்தி வேட்டையாட முயன்றது. சிறுத்தையிடம் பிடிபடாமல் போக்கு காட்டிய நாய் ஒருகட்டத்தில் தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி தப்பிச் சென்றது.
அப்போது, அவ்வழியே வந்த காட்டுப் பன்றி சிறுத்தையிடம் சிக்கியது. காட்டுப் பன்றியைத் தாக்கி குடியிருப்புப் பகுதியில் உள்ள மரத்துக்கு சிறுத்தை தூக்கிச் சென்றது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் சப்தம் எழுப்பினா். இதையடுத்து, காட்டுப் பன்றியின் உடலை மரத்திலேயே வைத்துவிட்டு சிறுத்தை சென்றது.
குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.