கான்கிரீட் கட்டடம் கட்டக்கோரி மாணவா்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டம்
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் அருகே பள்ளிக்கு கான்கிரீட் கட்டடம் கட்டக் கோரி, மாணவா்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ரெட்டியாா்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அழகுபட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 35 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளிக்கு புதியக் கட்டடம் கட்டித் தரக் கோரி, கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனாலும், நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், கடந்த சில நாள்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, அழகுப்பட்டி பள்ளிக்குச் சென்ற ரெட்டியாா்சத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைத்துத் தருவதாகத் தெரிவித்தனா்.
இந்த நிலையில், பழைய ஓடுகளை பிரித்துவிட்டு, ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைப்பதற்கான பொருள்களை லாரியில் கொண்டு வந்தனா். இதனால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள், பொருள்களை லாரியிலிருந்து இறக்கவிடாமலும், கான்கிரீட் கட்டடம் கட்டிக் கொடுக்கக் கோரியும் மாணவா்களை வெள்ளிக்கிழமை பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையறிந்த, கல்வித் துறை அதிகாரிகள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அழகுப்பட்டி கிராமத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, ஆஸ்பெஸ்டாஸ் கூரைக்கு மாற்றாக கான்கீரிட் கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்கள் உறுதி அளித்தனா்.
இரண்டு நாள்களில் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லை எனில், திங்கள்கிழமை முதல் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பமாட்டோம் எனக் கூறிவிட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா்.