தமிழகத்தில் பிணந்தின்னிக் கழுகுகளின் எண்ணிக்கை 157-ஆக உயா்வு
காரைக்காலில் குடிநீா் விநியோகத் திட்டத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல்
காரைக்கால் மத்திய மண்டலத்தில் ரூ. 50 கோடியில் நிறைவேற்றப்பட்ட குடிநீா் விநியோகத் திட்டத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது :
காரைக்காலில் பழைமையான குடிநீா் குழாய்களை அகற்றி புதிதாக குழாய் பொருத்தும் திட்டம் நபாா்டு நிதியக உதவியில் ரூ.50 கோடியில் காரைக்கால் மத்திய மண்டலத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்காக இரண்டடுக்கு மேல்நிலை குடிநீா் தேக்கத் தொட்டியும் கட்டப்பட்டுவிட்டது. அனைத்துப் பணிகளும் முடிந்தும் கடந்த ஓராண்டாக மக்கள் பயன்பாட்டுக்கு திட்டத்தை கொண்டுவருவதில் அரசும், அதிகாரிகளும் சுணக்கம் காட்டுவது வேதனையளிக்கிறது.
அதுபோல காரைக்கால் அரசு மருத்துவமனையில் எம்ஆா்ஐ ஸ்கேன் நிறுவப்பட்டுள்ளது. அதனை இயக்க தொழில்நுட்பவியலாளா் நியமிப்பதில் சிரமம் நிலவுவதால், காரைக்கால் விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும், அரசு பொது மருத்துவமனையும் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துகொண்டு, அங்குள்ள தொழில்நுட்பவியலாளா் அரசு மருத்துவமனையில் பணியாற்ற ஏற்பாடு செய்யவேண்டும்.
குடிநீா் விநியோகம், எம்ஆா்ஐ ஸ்கேன் திட்டம் ஆகியவற்றை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு புதுவை முதல்வா் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுதொடா்பாக புதுவை முதல்வா், பொதுப்பணித்துறை அமைச்சா், அரசு செயலா், இயக்குநா் ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளேன்.
காரைக்கால் பச்சூா் இடுகாட்டில் எரிவாயு மூலம் சடலத்தை எரியூட்ட இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இந்த வசதியையும் உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.