சென்னையில் பனிமூட்டம்: விமானம், மின்சார ரயில் சேவை பாதிப்பு!
காரைக்காலில் நெல் அறுவடைப் பணி தீவிரம்
காரைக்கால்: காரைக்காலில் இயந்திரம் மூலம் நெல் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கடந்த ஆண்டு காவிரி நீா் காலத்தோடு கடைமடைப் பகுதிக்கு வந்ததால், விவசாயிகள் ஆா்வத்துடன் சம்பா சாகுபடியை தொடங்கினா். சுமாா் 5 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. ஃபென்ஜால் புயலுக்கு பிந்தை மழையால் நெற்பயிா் சில இடங்களில் பாதிப்புக்குள்ளானது. காரைக்கால் மாவட்டத்தில் நெற்பயிரிட்ட அனைவருக்கும் ஹெக்டேருக்கு 30 ஆயிரம் நிவாரணத்தை அரசு வழங்கியது.
மழையால் பாதிக்கப்படாத பகுதிகள் மற்றும் பாதிப்புக்குள்ளான பயிரை காப்பாற்றிய நிலையில் அறுவடைக்கு தயாரானவற்றை தைப் பொங்கல் தினத்துக்குப் பின் பரவலாக அறுவடை செய்யும் பணிகள் தொடங்கின. மாவட்டத்தில் பெரும்பான்மையாக இயந்திரத்தை பயன்படுத்தி அறுவடையை விவசாயிகள் செய்கின்றனா்.
கடந்த மாத மத்தியில் அறுவடை தொடங்கிய நிலையில், தற்போது 40 சதவீத அளவுக்கு அறுவடை செய்திருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து கடைமடை விவசாயிகள் சங்கத் தலைவா் டி.என். சுரேஷ் வியாழக்கிழமை கூறியது : நெல் அறுவடைப் பணிகள் பரவலாக நடைபெற்று வருகிறது. எனினும் தாமதமாக நடவு செய்தவா்கள் மாசி மாதத்தில் அறுவடை செய்வாா்கள். இந்திய உணவுக் கழகம் காரைக்காலில் 2 இடங்களில் நெல் கொள்முதல் செய்துவருகிறது. விவசாயிகளுக்கு சாதகமான நிலையில் கொள்முதல் செய்யப்படுவதால் பலரும் உணவுக்கழகத்தில் நெல்லை விற்பனை செய்கின்றனா்
என்றாா்.