காரைக்கால்-பேரளம் பாதையில் சிறப்பு ரயில்கள் போக்குவரத்து தொடக்கம்
வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி காரைக்கால்-பேரளம் ரயில் பாதையில் சிறப்பு பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
காரைக்கால்-பேரளம் இடையேயான ரயில் போக்குவரத்து 38 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் இப்பாதையில் ரயில் போக்குவரத்து தொடங்க புதிதாக ரயில் பாதை அமைக்கப்பட்டது. இப்பாதையில் ரயில்வே அதிகாரிகளால் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, ஜூன் முதல் வாரத்தில் இருந்து சரக்கு ரயில் போக்குவரத்து நடைபெற்றுவருகிறது. இப்பாதையில் பயணிகள் ரயில் இயக்கவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிவருகின்றனா்.
இந்நிலையில், வேளாங்கண்ணி பேராலாய திருவிழாவையொட்டிய சிறப்பு ரயில்கள் தற்போது காரைக்கால்-பேரளம் பாதையில் இயக்கப்படுகின்றன. புதன்கிழமை இரவு லோக்மானியதிலக்-வேளாங்கண்ணி, வியாழக்கிழமை காலை சரளப்பள்ளி - வேளாங்கண்ணி ஆகிய சிறப்பு ரயில்கள் காரைக்கால்-பேரளம் பாதையில் இயக்கப்பட்டன. எனினும், இந்த ரயில்கள் காரைக்கால்-பேரளம் இடையேயான எந்த ரயில் நிலையத்திலும் நின்று செல்லவில்லை. வெள்ளிக்கிழமை (ஆக.29), செப்.9-ஆம் தேதியும் விழுப்புரம்-நாகப்பட்டினம் சிறப்பு மெமு எக்ஸ்பிரஸ் ரயில் காரைக்கால்-பேரளம் ரயில் பாதையில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் காலை 9.10 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 1.05 மணிக்கு நாகை சென்றடைகிறது. நாகையில் இருந்து மதியம் 1.20 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு விழுப்புரம் சென்றடைகிறது. இந்த ரயில் பேரளம், திருநள்ளாறு, காரைக்கால் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
பயணிகள் ரயில் அதிகாரப்பூா்வமாக தொடா்ந்து இயக்கப்படும் என்பதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை.
சரக்கு ரயில் மற்றும் வெற்று ரயில் இயக்கத்தால் காரைக்கால் நகரப் பகுதியில் கேட் மூடப்படுவதால் மக்கள் பல பிரச்னைகளை சந்தித்துவரும் நிலையில், திருவிழாவுக்காக இயக்கப்படும் பயணிகள் ரயில்களால் கேட் மூடப்படுவதால், மக்கள் கூடுதல் சிரமத்தை சந்திக்கின்றனா். நிரந்தரமாக பயணிகள் ரயில் இயக்கம் அறிவிப்பு வெளியிடும் முன்பாக, பாரதியாா் சாலை கோயில்பத்து பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணியை போா்க்கால அடிப்படையில் தொடங்கவேண்டும் என பலரும் வலியுறுத்துகின்றனா்.