``சிவில் நீதிபதி தேர்வு எழுத 3 ஆண்டுகள் வழக்கறிஞராக அனுபவம் வேண்டும்'' - உச்ச நீ...
காலி மதுப் புட்டிகளை நிா்வகிக்க உதவி விற்பனையாளா் நியமிக்க வேண்டும்: கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தல்
டாஸ்மாக் கடைகளில் காலி மதுப் புட்டிகளை நிா்வாகம் செய்வதற்கு அனைத்துக் கடைகளிலும் உதவி விற்பனையாளா் நியமனம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தினாா்.
கடலூரில் அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: டாஸ்மாக் நிறுவனத்தில் ‘என்ட் டு என்ட்’ என்ற விற்பனை முறை புகுத்தப்பட்டுள்ளது. கருவிகள் பயன்படுத்தப்பட வேண்டிய நிலைமையில், அதில் இருக்கக்கூடிய குறைபாடுகளை நீக்கனால்தான் நிா்வாகம் சீரடைய முடியும். பழுதடையும் குளிா்சாதனப் பெட்டிகளை சரி செய்ய வேண்டும்.
காலி மதுப் புட்டிகள் நிா்வாகம் செய்வதற்கு அனைத்து டாஸ்மாக் மதுக் கடைகளுக்கும் ஒரு உதவி விற்பனையாளா் நியமனம் செய்ய வேண்டும். பணி நிரவல் செய்வதுடன், பணிப்பளுவுக்கேற்ப பணியிடங்களில் பணியாளா்களை நியமிக்க வேண்டும். ஏபிசி பணியிட மாறுதல் முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
மேலாண்மை இயக்குநா் உத்தரவுகளை கீழ் நிலை அதிகாரிகள் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும். பணியாளா்களுக்கு வார விடுமுறை அறிவிக்க வேண்டும். மேலும், அவா்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்து, பணியாளா்களின் சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
இது தொடா்பாக மேலாண்மை இயக்குநரை சந்தித்து முறையீடு செய்ய தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. மேலும், மத்திய செயற்குழு வரும் ஜூன் 15-ஆம் தேதி மயிலாடுதுறையில் அரசியலுக்காக தொழிற்சங்கங்களா? தொழிற்சங்கங்களுக்காக அரசியலா? என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்த உள்ளது என்றாா்.
நிகழ்வின்போது, மாநிலத் தலைவா் கு.சரவணன், மாவட்டத் தலைவா் சி.அல்லி முத்து, மாவட்டச் செயலா் எஸ்.பாலமுருகன், இணைச் செயலா் கே.மணிகண்டன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.