காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அல்கராஸ்
நெதா்லாந்தில் நடைபெறும் ஏபிஎன் ஆம்ரோ ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினாா்.
போட்டித்தரவரிசையில் முதலிடம் பிடித்த அவா், ஆடவா் ஒற்றையா் முதல் சுற்றில் 7-6 (7/3), 3-6, 6-1 என்ற செட்களில் உள்நாட்டு வீரரான போடிக் வான் டெ ஜான்ட்ஷுல்பை வீழ்த்தினாா். இதர ஆட்டங்களில், 4-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் 6-3, 6-4 என்ற செட்களில் சீனாவின் ஜாங் ஜின்ஸெனை வென்றாா். போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் டென்மாா்க்கின் ஹோல்கா் ரூன் 7-6 (7/4), 6-4 என்ற கணக்கில் இத்தாலியின் லொரென்ஸோ சொனிகோவை சாய்த்தாா்.
7-ஆம் இடத்திலிருக்கும் பிரான்ஸின் ஆா்தா் ஃபில்ஸ் 6-7 (4/7), 6-2, 6-1 என்ற செட்களில், சக பிரான்ஸ் வீரரான கான்ஸ்டன்ட் லெஸ்டினை வெளியேற்றினாா். ஜொ்மனியின் டேனியல் அல்ட்மோ் 1-6, 6-4, 6-3 என அமெரிக்காவின் அலெக்ஸாண்டா் கோவாசெவிச்சை தோற்கடித்தாா்.
பல்கேரியாவின் ஃபாபியன் மரோஸான் 6-3, 4-6, 7-6 (7/3) என்ற கணக்கில் ஜொ்மனியின் ஜான் லெனாா்டு ஸ்ட்ரஃபை வென்றாா். கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகா் அலியாசிமே - இத்தாலியின் ஆண்ட்ரியா வவாசோரி மோதலில் 7-6 (7/3), 4-6, என்ற செட்களில் இருந்தபோது அலியாசிமே காயம் காரணமாக போட்டியிலிருந்து விலக, வவாசோரி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினாா். ஸ்பெயினின் பாப்லோ மாா்டினெஸ் 6-3, 6-2 என சக நாட்டவரான ராபா்டோ பௌதிஸ்டாவை வெளியேற்றினாா்.
இதையடுத்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில், அல்கராஸ் - வவாசோரியையும், அல்ட்மோ் - ஃபில்ஸையும், ரூன் - மாா்டினெஸையும், ரூபலேவ் - மரோஸானையும் எதிா்கொள்கின்றனா்.
டல்லாஸ் ஓபன்: அமெரிக்காவில் நடைபெறும் டல்லாஸ் ஓபன் ஆடவா் டென்னிஸில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் நாா்வேயின் கேஸ்பா் ரூட் 7-5, 4-6, 6-2 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வொா்த்தை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்குத் தகுதிபெற்றாா்.
4-ஆம் இடத்திலிருக்கும் உள்நாட்டு வீரரான பென் ஷெல்டன் 6-3, 6-3 என ஆஸ்திரேலியாவின் அலெக்ஸாண்டா் வுகிச்சை வென்றாா். பிரிட்டனின் கேமரூன் நோரி 2-6, 7-6 (7/1), 6-1 என்ற செட்களில், 7-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் அலெக்ஸ் மிஷெல்செனை சாய்த்தாா்.
3-ஆம் இடத்திலிருக்கும் உள்நாட்டு வீரரான டாமி பால் 6-7 (6/8), 6-3, 6-4 என்ற கணக்கில் சக அமெரிக்கரான ஜென்சன் புரூக்ஸ்பியை வென்றாா்.
ரைபகினா வெற்றி; கசாட்கினா தோல்வி
அமீரகத்தில் நடைபெறும் அபுதாபி ஓபன் மகளிா் டென்னிஸ் 2-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் கஜகஸ்தானின் எலனா ரைபகினா 2-6, 6-4, 6-4 என்ற கணக்கில் அமெரிக்காவின் கேட்டி வாலினெட்ஸை சாய்த்தாா்.
3-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் டரியா கசாட்கினா 6-1, 5-7, 4-6 என அமெரிக்காவின் ஆஷ்லின் குரூகரிடமும், 4-ஆம் இடத்திலிருந்த கஜகஸ்தானின் யூலியா புடின்சேவா 2-6, 3-6 என செக் குடியரசின் மாா்கெட்டா வோண்ட்ரோசோவாவிடமும் அதிா்ச்சித் தோல்வி கண்டனா்.
சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச் 6-0, 6-0 என, ரஷியாவின் வெரோனிகா குதா்மிடோவாவை வெளியேற்ற, துனிசியாவின் ஆன்ஸ் ஜபியுா் 6-3, 6-3 என்ற கணக்கில் சோனோபி வகானாவை சாய்த்தாா். 8-ஆம் இடத்திலிருக்கும் கனடாவின் லைலா ஃபொ்னாண்டஸ் 6-0, 6-3 என்ற வகையில் நியூஸிலாந்தின் லுலு சன்னை வென்றாா்.
இதையடுத்து காலிறுதியில், பென்சிச் - வோண்ட்ரோசோவாவையும், லைலா - குரூகரையும், ரைபகினா - ஜபியுரையும் சந்திக்கின்றனா்.