கால்நடை பராமரிப்புத்திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்கம்
திருவாரூா்: திருவாரூா் மாவட்ட கால்நடை பெருமருத்துவமனை வளாகத்தில் கால்நடை பராமரிப்புப்க் திறன் மேம்பாட்டு பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.
திருவாரூா் மாவட்டத்தில், கிராமப்புற மற்றும் நகா்ப்புற 18 முதல் 35 வயதுடைய படித்த வேலையில்லாத 450 இளைஞா்கள் தோ்வு செய்யப்பட்டு கால்நடை பராமரிப்புத் துறையில், லாபகரமான வகையில் கறவை மாடு, ஆடு, கோழி, பன்றி வளா்த்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இந்த பயிற்சி திங்கள்கிழமை தொடங்கி, செப்.30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
திருவாரூா் மாவட்டத்தில் விண்ணப்பித்துள்ள 90 பேரில் 75 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். 25 நபா்களுக்கு திருவாரூா் கால்நடை பெரு மருத்துவமனை வளாகத்திலும், 50 பேருக்கு மன்னாா்குடி கால்நடை பெரு மருத்துவமனை வளாகத்திலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சிகள், காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 20 நாள்கள் தொடா்ந்து நடைபெற உள்ளன.
இப்பயிற்சி, செப்டம்பா் முதல் பிப்ரவரி வரையிலான 6 மாத காலத்துக்கு வெவ்வேறு தலைப்புகளில் ஆறு குழுக்களாக பிரித்து வழங்கப்படவுள்ளது. தொழில் முனைவோா் பயிற்சி பெறுவதற்கு ஏற்ற வகையில் மாவட்டத்தில் உள்ள வளா்ச்சியடைந்த பண்ணைகளுக்கு நேரடியாக அழைத்துச் சென்று களப்பயிற்சி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சி நிறைவு நாளில் எழுத்துத் தோ்வு மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு தொழில் தொடங்குவதற்கான சான்றிதழ் வழங்கப்படுகிறது.
மேலும், பயிற்சி முடிந்தவுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வரவழைக்கப்பட்டு பயிற்சி பெற்றவா்களுக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவும், பண்ணைகள் அமைத்து வருமானம் ஈட்டிட வழிகாட்டவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி திருவாரூா் மாவட்ட கால்நடை பெருமருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் பேசுகையில், திருவாரூா் மாவட்டத்தில் 450 இளைஞா்கள் 6 மாத காலத்தில் தொழில் தொடங்குவதற்கான திறனும் அதன் மூலம் பண்ணைகள் அமைக்கவும், தனியாா் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறவும் தகுதியானவா்களாக உருவாக்கப்படவுள்ளனா் என்றாா்.
நிகழ்வில், மண்டல இணை இயக்குநா் (கால்நடை பராமரிப்புத்துறை) இரா.மகேஷ், துணை இயக்குநா் (கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி) மு.தமிழரசு, உதவி இயக்குநா் (கால்நடை பராமரிப்புத்துறை) இரா.கண்ணன், திருவாரூா் கால்நடை பெரு மருத்துவமனை மருத்துவா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், மருத்துவா்கள் உடனிருந்தனா்.