கால்பந்து திடலில் பார்வையாளர்கள் கூடத்தில் வெடித்த பட்டாசு! 30 பேர் படுகாயம்
கேரளத்தில் கால்பந்து திடலில் வெடித்த பட்டாசு பார்வையாளர்கள் கூடத்தில் சிதறி விழுந்ததில் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட அரீகோடு பகுதியில் நெல்லிகுத் மற்றும் மாவூர் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது.
இறுதிப்போட்டி என்பதால் இப்போட்டி தொடங்குவதற்கு முன்பு திடலில் பட்டாசு வெடிக்கப்பட்டது. திடலில் வெடித்த பட்டாசு சிதறி பார்வையாளர்கள் கூடத்தில் விழுந்து வெடித்தது. இதனால் கூடத்தில் இருந்த பார்வையாளர்கள் சிதறி ஓடினர். இதில் சிலர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து சம்பவ இடத்தில் இருந்த அரீகோடு காவல் துறையினர் கூறியதாவது,
’’கால்பந்து போட்டி தொடங்குவதற்கு முன்பு திடலில் பட்டாசு வெடிக்கப்பட்டது. அப்போது பட்டாசு சிதறி பார்வையாளர்கள் கூடத்தில் விழுந்து வெடித்தது. இதனால் அச்சமடைந்த பார்வையாளர்கள் சிதறி ஓடினர். இதில் சிலர் காயமடைந்தனர்.
பட்டாசு வெடித்ததிலும் சிலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் யாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை’’ என அதிகாரிகள் தெரிவித்தனர்.