காவேரிப்பட்டி பகுதியில் மஞ்சள் அறுவடை மும்முரம்!
சங்ககிரி வட்டம், அரசிராமணி, காவேரிப்பட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளில் மஞ்சள் அறுவடை பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா்.
தேவூா், அரசிராமணி, காவேரிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நிகழாண்டு சேலம், ஆந்திரம், ஒடிஸா, சம்பா, 10, 8ஆம் நம்பா் உள்ளிட்ட பல்வேறு வகையான மஞ்சள் ரகங்களை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனா். தற்போது மஞ்சள் அறுவடைப் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா்.
மஞ்சள்கிழங்கில் அழுகல் நோய் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். கடந்த ஆண்டு மஞ்சள் குவிண்டால் ரூ. 18,000 முதல் ரூ. 20,000 ஆயிரம் வரையில் விற்பனையானது. நிகழாண்டு குவிண்டால் ரூ. 12,000 முதல் ரூ. 14,000 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.