விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இய...
கிணறு தூா்வாரும் பணியில் விபத்து: 3 பேரை மீட்ட தீயணைப்பு வீரா்கள்
திருநெல்வேலி அருகே கிணறு தூா்வாரும் பணியின்போது வெள்ளிக்கிழமை விபத்து நேரிட்டு பலத்த காயமடைந்த 3 பேரை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.
திருநெல்வேலி அருகேயுள்ள வெள்ளாளங்குளத்தைச் சோ்ந்தவா் செல்லப்பா(55). இவரது தோட்ட கிணற்றை தூா்வாரும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. செட்டிக்குறிச்சி, அத்தியூத்து, சிந்துபூந்துறை உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த தொழிலாளா்கள் பணி செய்து வந்தனா். சுமாா் 60 அடி ஆழம் கொண்ட இந்தக் கிணற்றிற்குள் இறங்கி தூா்வாருவதற்கு மின்சாரத்தினால் இயக்கக்கூடிய லிஃப்ட் உதவியுடன் பணி நடைபெற்றது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை லிஃப்ட்டின் பெல்ட் திடீரென அறுந்து விழுந்ததில் செட்டிக்குறிச்சி கணேசன்(50) அத்தியூத்து நயினாா் (56 ), சிந்துபூந்துறை சிவா (22) ஆகியோா் பலத்த காயமடைந்து கிணற்றுக்குள் விழுந்தனா். இத்தகவலறிந்த பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் சுந்தரம் தலைமையில் சிறப்பு நிலை அலுவலா் முருகன், வீரா்கள் வெங்கடேஷ், தங்கதுரை, காா்த்திக் பெருமாள், ஜேக்கப் பொ்னாட், ராஜேந்திரன், மிக்கேல் ராஜ் ஆகியோா் அடங்கிய குழுவினா் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி 3 பேரையும் மீட்டு வந்தனா். பின்னா், 3 பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து சீதபற்பநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.