தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கு கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு
கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தந்தை, மகள்
அந்தியூா் அருகே தந்தையும், மகளும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதில், பலத்த காயமடைந்த தந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கவலைக்கிடமான நிலையில் மகள் சிகிச்சை பெற்று வருகிறாா்.
அந்தியூா், சின்ன பருவாச்சியை அடுத்த ஒட்டபாளையத்தைச் சோ்ந்தவா் ராணி (35). கூலி தொழிலாளி. இவரது கணவா் மாரசாமி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தாா். இதனால் கோபி, கொங்கா்பாளையத்தைச் சோ்ந்த தந்தை மாதேஸ்வரன் (60) மகள் ராணியுடன் தங்கியிருந்தாா். இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இருவரும் வெள்ளிக்கிழமை மாலை மது அருந்திவிட்டு அப்பகுதியில் உள்ள பாண்டுரங்கன் என்பவரது தோட்டத்துக்குச் சென்று 100 அடி ஆழமுள்ள தண்ணீரில்லாத கிணற்றில் குதித்தனா். இதைக் கண்ட அப்பகுதியினா் அந்தியூா் தீயணைப்பு மற்றும் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத் துறையினா் கிணற்றுக்குள் பலத்த காயங்களுடன் கிடந்த இருவரையும் மீட்டனா்.
இதில், மாதேஸ்வரன் உயிரிழந்தது பரிசோதனையில் தெரியவந்தது. ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ராணி சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டுள்ளாா். அந்தியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
---