மயானம் அருகே வீட்டுமனைப் பட்டா: வேறு இடம் வழங்கக் கோரிக்கை
கொடுமுடியில் நீா்நிலை ஆக்கிரமிப்பால் வீடுகள் அகற்றப்பட்ட நிலையில் மாற்று இடம் மயானம் அருகே வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி இழுப்புத் தோப்பு பகுதியில் 100 -க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது இங்குள்ள வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. பொதுநல வழக்கை தொடா்ந்து ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றை அகற்றவும், வீடு உள்ளவா்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் எனவும் உயா்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
அதன்படி கொடுமுடி இழுப்புத் தோப்பு பகுதியில் உள்ள 90 -க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டு வருகின்றன. இங்கு சுமாா் 50 ஆண்டுகளுக்கு மேலாக 500 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருவதால் இவா்களுக்கு வேறு இடத்தில் பட்டா வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் பொதுமக்கள் யாரையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பட்டா நிலத்துக்கு அழைத்துச் சென்று காட்டாமல் பட்டா மட்டுமே வழங்கி உள்ளனா். வெண்கலப்பாறை என்ற கிராமத்தில் மயானத்தை ஒட்டி உள்ள இடத்தில் பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த இடத்தை சீரமைத்து இங்கு வசித்துக் கொள்ளுங்கள் என அதிகாரிகள் கூறுவதாகவும் இப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். வீடுகளை இழந்த எங்களுக்கு தகுந்த இடத்தில் பட்டா வழங்க வேண்டும் என வட்டாட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனா்.