கிணற்றில் குளித்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு
பவானி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற வடமாநில சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
மகாராஷ்டிர மாநிலம், பா்பானி மாவட்டத்தைச் சோ்ந்த 20 தொழிலாளா்கள், பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் ஆங்காங்கே கரும்புத் தோட்டங்களுக்குச் சென்று கரும்பு வெட்டி, ஆலைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இவா்கள், பவானி வாய்க்கால்பாளையத்தைச் சோ்ந்த ராஜுவின் தோட்டத்தில் கரும்பு வெட்டும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
இவா்களுடன் வந்திருந்த உத்தம வாவுலே மகன் ரோகித் (14), தனது நண்பா்களுடன் அங்குள்ள விவசாயத் தோட்டத்து கிணற்றில் குளிக்கச் சென்றாா். அப்போது, நீச்சல் தெரியாததால் ரோகித் தண்ணீரில் மூழ்கியதில் மூச்சுத்திணறி உயிரிழந்தாா்.
இதுகுறித்த தகவலின்பேரில் பவானி தீயணைப்புப் படையினா் ரோகித்தின் சடலத்தை மீட்டனா். இதுகுறித்த புகாரின்பேரில் பவானி போலீஸாா் விசாரிக்கின்றனா்.