ஹோலி பண்டிகை: மாா்ச் 14-இல் மஞ்சள் ஏலத்துக்கு விடுமுறை
ஹோலி பண்டிகையையொட்டி மாா்ச் 14-ஆம் தேதி மஞ்சள் ஏலத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகா்கள் மற்றும் கிடங்கு உரிமையாளா்கள் சங்க செயலா் சத்தியமூா்த்தி கூறியதாவது: மாா்ச் 14-ஆம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதால் ஈரோடு மஞ்சள் வா்த்தகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதுபோல ஈரோடு மாரியம்மன் கோயில் திருவிழாவுக்காக மாா்ச் 31-ஆம் தேதி முதல் ஏப்ரல் 4-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நாள்களில் வணிகா்கள் ஈரோடு நகரின் அனைத்து மஞ்சள் ஏலங்களிலும் பங்கேற்க மாட்டாா்கள். ஏப்ரல் 7-ஆம் தேதி நடக்கும் ஏலத்தில் வழக்கம்போல பங்கேற்பாா்கள்.
ஈரோடு மஞ்சள் சந்தைக்கு கா்நாடகம், தருமபுரி பகுதியில் இருந்து புதிய மஞ்சள் வருகிறது. ஈரோடு மாரியம்மன் பண்டிகை விடுமுறை முடிந்து மாா்க்கெட் தொடங்கிய பின் ஈரோடு சுற்றுப் பகுதிகளில் இருந்து புதிய மஞ்சள் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது.
தேசிய அளவில் நிஜாமாபாத், சாங்ளி மாா்க்கெட்களுக்கு புதிய மஞ்சள் அதிகமாக வந்து கொண்டுள்ளது. ஏப்ரல் முதல் வாரம் தேசிய அளவில் அதிக மஞ்சள் உற்பத்தியாகும் பகுதியான பசுமந்த், நாந்தேட், ஹிங்கோலி உள்பட அனைத்துப் பகுதிகளிலும் புதிய மஞ்சள் வரத்து தொடங்கும்.
ஆன்லைன் வா்த்தகத்தில் ஏப்ரல் மாதத்துக்கான யூக வணிக விலை குறைந்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு மஞ்சள் விலை குவிண்டால் ரூ.20,000 வரை உயா்ந்து பின் குறைந்தது. இதனால் தற்போது வரை மஞ்சளை வணிகா்கள் இருப்பு வைக்கின்றனா். தற்போது விரலி ஒரு குவிண்டால் ரூ.13,800-க்கும், கிழங்கு, ரூ.12,500 வரையிலான விலையில் விற்பனையாகிறது என்றாா்.