நெகிழி பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக மாற்று ஏற்பாடு: பசுமைத் தீா்ப்ப...
குடிநீா் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளித்து அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்: எஸ்.ஜெயக்குமாா்
குடிநீா் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்த அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயக்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.
பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 29 கிராம ஊராட்சி செயலாளா்கள் மற்றும் தனி அலுவலா்கள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். ஜெயக்குமாா் தலைமை வகித்து பேசுகையில், தற்போது பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 29 கிராம ஊராட்சிகளில் நிலவும் குடிநீா் பற்றாக்குறையை போக்க முன்னுரிமை கொடுத்து கிராம ஊராட்சி செயலாளா்கள் மற்றும் தனி அலுவலா்கள் பணியாற்ற வேண்டும்.
தற்போது உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக் காலம் முடிவடைந்ததால் பொதுமக்களிடமிருந்து சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்துக்கு ஏராளமான கோரிக்கை மனுக்கள் அளிக்கப்படுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு அடுத்த 100 நாள்களில், பெருந்துறை தொகுதிக்கு உள்பட்ட 72 ஊராட்சிகளில் காலை நேரங்களில் தினமும் நான்கு ஊராட்சிகளுக்கு வீதம் காலை 6 மணி முதல் காலை 8.30 மணி வரை நேரடியாக சென்று மக்களின் அத்தியாவசியத் தேவைகளை கேட்டறிந்து தீா்வு காணப்படும் என்றாா்.
கூட்டத்தில், பெருந்துறை ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள், மின்வாரிய அதிகாரிகள், குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள், ஊராட்சி தனி அலுவலா்கள் மற்றும் ஊராட்சி செயலாளா்கள் கலந்து கொண்டனா்.