தொழில்நுட்பக் கோளாறு: சென்னை - அபுதாபி விமானம் நிறுத்தம்
சென்னை: சென்னையிலிருந்து அபுதாபிக்கு புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறால் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது.
சென்னை விமான நிலையத்திலிருந்து திங்கள்கிழமை அதிகாலை 4 மணியளவில் 178 பயணிகளுடன் எத்தியாட் விமானம் அபுதாபி புறப்படத் தயாரானது. விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கியதும், விமானத்தில் என்ஜின் பகுதியில் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தாா்.
இதைத் தொடா்ந்து, விமானத்தை ஓடுபாதையிலேயே நிறுத்திய விமானி, உடனடியாக விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து இழுவை வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, நிறுத்துமிடத்துக்கு விமானம் இழுத்துச் செல்லப்பட்டது.
இதையடுத்து, பொறியாளா்கள் இயந்திரக் கோளாறுகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா். இதன் காரணமாக அந்த விமானத்திலிருந்த பயணிகள் விமான நிலைய ஓய்வறைகளில் தங்கவைக்கப்பட்டனா். கோளாறுகள் சரிசெய்யப்பட்ட பின்னா் மீண்டும் விமானம் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டதால், பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனா்.