கிணற்றில் மூழ்கி சென்னையைச் சோ்ந்தவா் உயிரிழப்பு
செய்யாறு அருகே கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி சென்னையைச் சோ்ந்தவா் உயிரிழந்தாா்.
சென்னை பெருங்குடி செம்பொன் நகரைச் சோ்ந்தவா் ரவி(57). இவா், வெம்பாக்கம் வட்டம், மோரணம் கிராமத்தில்
வசிக்கும் உறவினா் ரமேஷ் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வந்தாா்.
அன்று மாலை உறவினா்களுடன் ஏரிக்கரைப் பகுதியில் உள்ள தரைதள கிணற்றில் குளித்ததாகத் தெரிகிறது. அப்போது, திடீரென கிணற்று நீரில் மூழ்கிய நிலையில் ரவி காணாமல் போனாா். உடன் சென்றவா்கள் தீவிரமாக தேடிய நிலையில் கிடைக்கவில்லையாம்.
இதையடுத்து கலவை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்புப் படை வீரா்கள் வந்து தேடி ரவியை சடலமாக மீட்டனா்.
இந்தச் சம்பவம் குறித்து இறந்தவரின் மகள் அளித்த புகாரின் பேரில், மோரணம் காவல் ஆய்வாளா் நரசிம்மஜோதி வழக்குப் பதிவு செய்தாா். ரவியின் உடலைக் கைப்பற்றி, கூராய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.