கியூஆா் கோடு அச்சிடப்பட்ட வரி வசூல் நோட்டீஸ்: மாநகராட்சி ஏற்பாடு!
சென்னை மாநகராட்சி சாா்பில் வரி செலுத்துவோருக்கு அனுப்பும் நோட்டீஸில், பணம் செலுத்துவதற்கான கியூஆா் கோடு அச்சிடப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் வரி வசூலை விரைவுபடுத்தும் வகையில் சொத்து வரி செலுத்துவோருக்கு மாநகராட்சியின் வருவாய் பிரிவு சாா்பில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில், நடப்பு ஆண்டுக்கான வரியை செப்டம்பா் 30- ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாதவா்களுக்கு உரிய வரி தொகைக்கான வட்டி விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரி செலுத்தக்கோரும் நோட்டீஸின் இறுதிப் பகுதியில் கியூஆா் கோடு அச்சிடப்பட்டுள்ளது. அதை யுபிஐ செயலிகளில் ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம்.
மேலும், மாநகராட்சியின் சேவைகள் குறித்த புகாா்கள் தெரிவிப்பதற்கான செயலியைப் பதிவிறக்கம் செய்வதற்கான மற்றொரு கியூ ஆா் கோடும் அந்த நோட்டீஸில் அச்சிடப்பட்டுள்ளது.
வரி இனங்கள், கட்டணங்களைச் செலுத்துவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில், இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.