கிராம குளத்தில் புகுந்த முதலை மீட்பு!
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே அறந்தாங்கி கிராமத்தில் குளத்தில் புகுந்த முதலையை இளைஞா்கள் பிடித்து வனத் துறையினரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.
அறந்தாங்கி கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே உள்ள குளத்தில் கடந்த சில தினங்களாக முதலை ஒன்று இருப்பதை பாா்த்து பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
இந்த முதலை கடந்த ஒரு மாதமாக இருப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் குளத்தில் முதலை தென்பட்டதால், பொதுமக்கள் சிதம்பரம் வனத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.
இதையறிந்த கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள் ஒன்றிணைந்து வலையை பயன்படுத்தி முதலையை பிடித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினரிடம் இளைஞா்கள் தாங்கள் பிடித்து வைத்திருந்த முதலையை பத்திரமாக ஒப்படைத்தனா். முதலை வனத் துறையினரால் மீட்கப்பட்டு, கீழணையில் கொள்ளிடம் ஆற்றில் பத்திரமாக விடப்பட்டது.
வனத் துறையினா் கிராம இளைஞா்களிடம் இதுபோன்று முதலையை பிடிக்கக் கூடாது எனவும், முதலையை பிடிப்பது மிகவும் ஆபத்தானது எனவும் எச்சரித்தனா்.