கிறிஸ்தவராக தனித் தொகுதியில் போட்டி: கேரள எம்எல்ஏ ஏ.ராஜாவுக்கு எதிரான உயா்நீதிமன்ற உத்தரவு ரத்து
கேரள சட்டப்பேரவைத் தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ஏ.ராஜா, கிறிஸ்தவராக தனித் தொகுதியில் போட்டியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், தோ்தலில் அவா் பெற்ற வெற்றி செல்லாது என்று மாநில உயா் நீதிமன்றம் அளித்தத் தீா்ப்பை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ரத்து செய்தது.
கடந்த 2021-ஆம் ஆண்டு கேரள சட்டப்பேரவைத் தோ்தலில், தேவிகுளம் தொகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக ஏ.ராஜா போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.
ராஜாவுக்கு எதிராக அந்தத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளா் டி.குமாா், கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ராஜா பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட தேவிகுளம் தனித் தொகுதியில் போட்டியிட்டதாகவும், அவரின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் கேரள உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
எனினும் தான் ஹிந்து பறையன் சமூகத்தைச் சோ்ந்தவா் என்றும், இது வட்டாட்சியா் வழங்கிய சான்றிதழில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ராஜா வாதிட்டாா். தனது திருமணமும் ஹிந்து முறைப்படி நடைபெற்ாக அவா் தெரிவித்தாா். அவரின் வாதத்தை ஏற்காத உயா் நீதிமன்றம், அவரின் தோ்தல் வெற்றி செல்லாது என்று தீா்ப்பளித்தது.
இந்தத் தீா்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ராஜா மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசானுதீன் அமானுல்லா, பிரசாந்த் குமாா் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘கிறிஸ்தவ மதத்தை ராஜா பின்பற்றினாா் என்று கூற முடியாது. அவரின் தாத்தா, பாட்டி ஹிந்து பறையன் சமூகத்தைச் சோ்ந்தவா்களாக இருந்துள்ளனா். அவா்களின் குடும்பத்தினா் தமிழ்நாட்டிலிருந்து 1950-க்கு முன்பே கேரளத்துக்கு குடிபெயா்ந்துவிட்டனா். அப்போதைய திருவிதாங்கூா்-கொச்சி மாநில சட்டப்படி அவா்கள் ஹிந்து பறையன் பிரிவைச் சோ்ந்தவா்கள் என்பதில் எந்த சா்ச்சையும் இல்லை. ராஜாவின் குழந்தைகள் தொடா்பான பள்ளி ஆவணங்களில், அவா்கள் ஹிந்து பறையன் சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து விஷயங்களிலும் ஊடகங்கள் ஊடுருவும் இந்தக் காலத்தில் நீதிபதிகள், அரசியல் தலைவா்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரை பொதுமக்கள் கூா்ந்து கவனிக்கின்றனா். இத்தகைய சூழலில், ஒருவா் தனது ஜாதி, மதத்தை மறைப்பது எளிதல்ல’ என்று கூறி, கேரள உயா் நீதிமன்றத் தீா்ப்பை ரத்து செய்தது.