``குடித்துவிட்டு உயிரிழந்தால் அமைச்சரை கைது செய்வார்களா?'' -அல்லு அர்ஜுன் கைதுக்கு சீமான் கேள்வி!
திரைப்பட இயக்குநர் பாலா, திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்வதைக் கொண்டாடுவதையும், அவரது அடுத்த படைப்பான 'வணங்கான்' படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் இணைத்து பெரும் விழாவாக நேற்று சென்னையில் கொண்டாடினர்.
இந்த விழாவில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாலாவுக்கு வாழ்த்து தெரித்ததுடன் கைது செய்யப்பட்டுள்ள தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவான கருத்துகளையும் தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் சீமான், "என் அன்பு தம்பி சுரேஷ் காமாட்சி தயாரித்து, ஆருயிர் இளவல் பாலா இயக்கும் வணங்கான் திரைப்பட வெளியீட்டு விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி. குறிப்பாக தம்பி பாலா திரைத்துறை பயணத்தில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்." எனத் தெரிவித்தார்.
அந்த நேரத்தில் பத்திரிகையாளர் அல்லு அர்ஜுன் கைது குறித்து கேள்வி எழுப்புகையில், "அல்லு அர்ஜுனைக் கைது செய்தது தேவையற்றது. அதை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளேன். திரையரங்க நெரிசலில் ரசிகை இறந்துபோனது ஒரு விபத்து. அதற்கு எந்தவகையிலும் நடிகர் பொறுப்பேற்க முடியாது.
டாஸ்மாக்கில் குடித்துவிட்டு ஒருவர் உயிரிழக்கிறார் என்றால் அதற்கு அந்த துறை சார்ந்த அமைச்சர் பொறுப்பேற்று அவரைக் கைது செய்வார்களா? ஆக கைது அவசியமற்றது.
இன்றைக்கு அந்த படத்தின் வசூல் அதிகரித்திருப்பதாக செய்தில் பார்த்தேன். அவரை அவமானப்படுத்துவதாக நினைத்து வசதி செய்துகொடுத்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்." என்றார்
மேலும், "அல்லு அர்ஜுன் அந்த குடும்பத்துக்கு நிதியளித்து உதவுவதாக கூறியுள்ளார். அவ்வளவுதான் ஒரு நடிகர் செய்ய முடியும்." எனத் தெரிவித்தார் சீமான்.
புஷ்பா திரைப்படம் வெளியான அன்று அல்லு அர்ஜுன் சென்றிருந்த திரையரங்கில் மகனுடன் படம் பார்க்க வந்த பெண் கூட்ட நெரிசலால் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் நேற்று மூளைச்சாவடைந்திருக்கிறார். இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், அல்லு அர்ஜுனைக் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்தது குறிப்பிடத்தது.