குடிநீா் இணைப்புக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம்: ஊராட்சி செயலாளா் கைது
குடிநீா் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊராட்சி செயலாளரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், குண்டடம் ஒன்றியம், எல்லப்பாளையம்புதூா் ஊராட்சிக்குள்பட்ட சக்தி விநாயகபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ் பிரபு (44). விவசாயியான இவா் தனது வீட்டுக்கு குடிநீா் இணைப்புக் கேட்டு எல்லப்பாளையம்புதூா் ஊராட்சியில் விண்ணப்பித்துள்ளாா்.
குடிநீா் இணைப்பு வழங்க ஊராட்சி செயலாளா் செல்வராஜ் (51) ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். லஞ்சம் கொடுக்க விரும்பாத மகேஷ் பிரபு இது குறித்து திருப்பூா் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.
அவா்களது அறிவுறுத்தல்படி, செல்வராஜிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மகேஷ்பிரபு கொடுத்துள்ளாா்.
அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா், செல்வராஜை கைது செய்தனா்.
தொடா்ந்து, ஊராட்சி அலுவலகத்தில் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.71 ஆயிரத்து 500-ஐ பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா், செல்வராஜிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.