குடியரசு நாளன்று டிராக்டா் பேரணிக்கு அழைப்பு!
குடியரசு தினமான ஜன.26 அன்று நாடு முழுவதும் டிராக்டா் பேரணிக்கு சம்யுக்த் கிசான் மோா்ச்சா (எஸ்கேஎம்) அழைப்பு விடுத்துள்ளது, மேலும், நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து பிரதமா் நரேந்திர மோடி விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது.
48 நாள்களாக காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கும் விவசாயிகள் சங்கத் தலைவா் ஜெக்ஜித் சிங் தால்லேவாலின் உடல்நிலை குறித்து அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில் எஸ்கேஎம் அமைப்பின் இந்த அழைப்பு வந்துள்ளது.
எஸ்கேஎம் (அரசியல் சாராத) அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் தால்லேவால், வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) சட்டப்பூா்வ உத்தரவாதம் உள்ளிட்ட விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளுக்காக கடந்த ஆண்டு நவ. 26 முதல் பஞ்சாப் மற்றும் ஹரியாணா இடையேயான கானௌரி எல்லைப் பகுதியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்.
இங்கு வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் விவசாய சந்தைப்படுத்தல் தொடா்பான தேசியக் கொள்கை கட்டமைப்பை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக கூட்டுப் போராட்டத்திற்காக எஸ்கேஎம் (அரசியல் சாராத) மற்றும் கேஎம்எம் உடனான கூட்டம் திங்கள்கிழமை நடைபெறும் என்றும் எஸ்கேஎம் அறிவித்துள்ளது.
‘2025 ஜன.26-ஆம் தேதி, 76-ஆவது குடியரசு தினத்தன்று, நாடு முழுவதும் மாவட்ட / துணைப் பிரிவு மட்டத்தில் டிராக்டா் / வாகனம் / மோட்டாா் சைக்கிள் அணிவகுப்புகளை நடத்துமாறு எஸ்கேஎம் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது‘ என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
‘பிரதமா் அனைத்து கிசான் அமைப்புகளுடனும் கலந்துரையாடல்களை நடத்தி, ஜெக்ஜித் சிங் தால்லேவாலின் உயிரைக் காப்பாற்ற வேண்டும். வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கானசட்டத்தை இயற்ற வேண்டும் என்று கோரி விவசாயிகள் அணிவகுப்பு நடத்துவாா்கள்’ என்று எஸ்கேஎம் மேலும் கூறியது.
விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்களுக்கான விரிவான கடன் தள்ளுபடி திட்டம். மின்சாரத்தை தனியாா்மயமாக்கக் கூடாது. ஸ்மாா்ட் மீட்டா்கள் வேண்டாம். 300 யூனிட்கள் வரை இலவச மின்சாரம் வழங்குதல் ஆகியவையும் கோரிக்கைகளில் அடங்கும்.
‘விவசாய அமைப்புகளுடன் விவாதிக்கவும், விவசாயத் தலைவா் ஜெக்ஜித் சிங் தால்லேவாலின் உயிரைப் பாதுகாக்கவும் பிரதமரின் சா்வாதிகார, உணா்ச்சியற்ற அணுகுமுறையை எஸ்கேஎம் கடுமையாகக் கண்டிக்கிறது’ என்று எஸ்கேஎம் அறிக்கையில் கூறியுள்ளது.