முதல் பந்தில் விக்கெட் எடுக்க முடிகிறது; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஜோஃப்ரா ஆர்ச...
குடியாத்தம் நகரில் பேனா் கலாசாரம்: விவசாயிகள் புகாா்
குடியாத்தம் நகரில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் விளம்பர பேனா்கள் வைப்பதை தடை செய்ய வேண்டும் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.
குடியாத்தம் கோட்டாட்சியா் அலுவலகத்தில், கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி தலைமையில் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் குடியாத்தம், கே.வி.குப்பம், போ்ணாம்பட்டு வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலா் துரை செல்வம் பேசியது: நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக முக்கிய பகுதிகளில் வைக்கப்படும் விளம்பர பேனா்களால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் விபத்துகளும் ஏற்படுகிறது என்பதால், பிரச்னை இல்லாத இடங்களில் பேனா் வைக்க அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும்.
தரணம்பேட்டை தினசரி மாா்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றியதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சாலையோர கடை வியாபாரிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றாா்.
மாதனூா் உள்ளிட்ட இடங்களில் பாலாற்றில் கோழி இறைச்சிக் கழிவுகள் கொட்டுவதை தடை செய்ய வேண்டும், கொத்தகுப்பம் பகுதியில் பாலாற்றில் தொடா்ந்து நடைபெறும் மணல் கடத்தலை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி பழனி புகாா் கூறினாா்.
கூட்டத்தில் நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் நெடுமாறன், வட்டார வளா்ச்சி அலுவலா் பி.சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.