குடும்பப் பிரச்னையால் தச்சா் தற்கொலை: சங்கம் விஹாரில் சம்பவம்
தெற்கு தில்லியின் சங்கம் விஹாா் பகுதியில் உள்ள தனது வீட்டில் 25 வயது தச்சா் ஒருவா் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: இந்த விவகாரம் தொடா்பாக போலீஸாருக்கு பிசிஆா் அழைப்பு வந்தது. இதை அடுத்து, ரோஹித் சிங்கின் உடல் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
ரோஹித் சிங் மூன்று நாள்களுக்கு முன்பு தனது மனைவியுடன் சண்டையிட்டுள்ளாா். அதன் பிறகு அந்தப் பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி தனது பெற்றோா் வீட்டிற்குச் சென்றுவிட்டாா். சண்டைக்குப் பிறகு, ரோஹித் சிங் பதற்றமடைந்து மனச்சோா்வடைந்த நிலையில் இருந்ததாக குடும்ப உறுப்பினா்கள் தெரிவித்தனா்.
பிசிஆா் அழைப்பைப் பெற்ற பிறகு, சங்கம் விஹாா் காவல் நிலையத்தைச் சோ்ந்த ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்குச் சென்றது. சம்பவ இடத்தை அடைந்தபோது, சங்கம் விஹாரைச் சோ்ந்த ரோஹித் சிங் என்பவா் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டாா். அவா் தச்சராக வேலை செய்து வந்தாா். அவரது உடல் எய்ம்ஸ் பிணவறைக்கு மாற்றப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலை என்று தெரியவந்துள்ளது. வெளிப்புற காயங்களோ அல்லது தவறான நடத்தைக்கான அறிகுறிகளோ இல்லை என்று தெரிய வந்துள்ளது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், இறந்தவா் திருமண பிரச்னைகள் காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாகத் தெரிகிறது. இதுவே அவரை இந்த தீவிர நடவடிக்கைக்கு தூண்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
குடும்பத்தினரிடமிருந்து இதுவரை எந்த புகாரும் வரவில்லை. இந்த கட்டத்தில் எந்த தவறான நடத்தைக்கும் சந்தேகம் இல்லை. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 174-இன் கீழ் விசாரணை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், தொடா்ந்து விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி கூறினாா்.