குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலையில் நடமாடும் காட்டு யானை: வனத் துறை எச்சரிக்கை
குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை காட்டு யானை நடமாட்டம் இருப்பதால் வனத் துறையினா் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதோடு, வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறும் அறிவுறுத்தி உள்ளனா்.
சமவெளி பகுதியான மேட்டுப்பாளையம், சிறுமுகை, சத்தியமங்கலம் பகுதிகளில் உள்ள வனப் பகுதிகளில் வறட்சி நிலவுவதால் குடிநீா் மற்றும் உணவு தேடி காட்டு யானைகள் குன்னூா்- மேட்டுப்பாளையம் வனப் பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளன.
இதில் கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை காட்டு யானை, குன்னூா்- மேட்டுப்பாளைம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் விளைந்துள்ள பலாப்பழம் மற்றும் கோரைப் புற்களை உண்பதற்காக இப்பகுதியில் முகாமிட்டுள்ளது. அமைதியாக வந்து செல்லும் இந்த யானையை வாகனத்தில் செல்வோா் புகைப்படம் எடுத்து வருகின்றனா்.
பா்லியாா், குரும்பாடி இடையே சனிக்கிழமையும் இந்த யானை உலவியதால் வாகன ஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். தொடா்ந்து அவா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.