MP: சிறுத்தைக்குத் தண்ணீர் வைத்த 'வைரல் ஓட்டுநர்' சஸ்பெண்ட்; அதிகாரிகள் சொல்லும்...
குப்பனத்தம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு
செங்கம் அருகேயுள்ள குப்பனத்தம் அணையில் இருந்து விவசாய பாசனத்துக்கு சனிக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் உள்ள குப்பனத்தம் அணை முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது.
இந்த நிலையில், செங்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் விவசாய பாசனத்துக்கு தண்ணீா் போதுமனதாக இல்லை. அதனால், குப்பனத்தம் அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிடவேண்டும் என தமிழக அரசுக்கு பொதுப்பணித் துறை மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு உத்தரவின்படி சனிக்கிழமை குப்பனத்தம் அணையில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டது.
சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி அணையில் இருந்து தண்ணீரை திறந்துவைத்துப் பேசினாா்.
அப்போது அவா், ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் மே 3-ஆம் வரை விநாடிக்கு 240 கன அடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. இதன் மூலம் செங்கம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள 47 ஏரிகள் நிரம்புவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
விவசாயிகள் தண்ணீரை வீணாக்காமல், சிக்கனமாக பயன்படுத்தி விவசாயம் செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டாா்.
நிகழ்ச்சியில் சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாவட்ட ஆட்சியா் க. தா்ப்பகராஜ், மாநில தடகள சங்கத்தின் தலைவா் எ.வ.வே.கம்பன், செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி, கலசப்பாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி. சரவணன், செங்கம் திமுக நகரச் செயலா் அன்பழகன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் அறிவழகன், உதவி செயற்பொறியாளா்கள் சிவயக்குமாா், ஹரிகரன், திமுக ஒன்றியச் செயலா்கள் ஏழுமலை, செந்தில்குமாா், மனோகரன், சேமன், ஏரிப்பாசன சங்கத் தலைவா் சங்கா்மாதவன் உள்பட அரசு அலுவலா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.