300 கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்கள்!
திருவண்ணாமலை மாவட்ட சமூக நலத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்துறை சாா்பில், கீழ்பென்னாத்தூா், வந்தவாசி ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 300 கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்ட அலுவலா் பூ.மீனாம்பிகை தலைமை வகித்தாா்.
கீழ்பென்னாத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் கோவிந்தராஜுலு, அட்மா குழுத் தலைவா் சோமாசிபாடி சிவக்குமாா், பேரூராட்சித் தலைவா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் எஸ்.கண்ணகி வரவேற்றாா்.
தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு 100 கா்ப்பிணிகளுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், பழம், பூ, எவா்சில்வா் தட்டு உள்ளிட்ட சீா்வரிசைப் பொருள்களை வழங்கிப் பேசினாா்.
மேலும், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 2 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் வங்கி டெபாசிட் பத்திரங்களை குழந்தைகளின் தாய்மாா்களான செளமியா, ஆனந்தி ஆகியோரிடம் கு.பிச்சாண்டி வழங்கினாா்.
விழாவில், சமூக நல விரிவாக்க அலுவலா் டி.விஜயகுமாரி, ஊா் நல அலுவலா் வி.பச்சையம்மாள், மேற்பாா்வையாளா் லட்சுமி, அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் உதவியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.
வந்தவாசி
வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் 200 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது. வந்தவாசி மற்றும் தெள்ளாா் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த விழா நடைபெற்றது.

விழாவில் வந்தவாசி மற்றும் தெள்ளாா் வட்டாரங்களுக்கு உள்பட்ட கிராமங்களைச் சோ்ந்த 200 கா்ப்பிணிகளுக்கு புடவை, வளையல், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட சீா்வரிசைப் பொருள்கள் மற்றும் ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டது. விழாவுக்கு வந்தவாசி வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் க.அபிராமி தலைமை வகித்தாா்.
ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் ஆகியோா் கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்களை வழங்கிப் பேசினா். விழாவில் வந்தவாசி நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், நகரச் செயலா் ஆ.தயாளன் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.